நடிகை சமந்தா தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் யசோதா, சகுந்தலம், அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் ஆகிய படங்கள் உள்ளன. இதில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுதவிர பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வந்தார் சமந்தா. விஜய் நிர்வானா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை இப்படக்குழு சர்ப்ரைஸாக கொண்டாடி வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.
இந்நிலையில், சமந்தா - விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு குஷி என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.