கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இது பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிம்பு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த சில மாதங்களாக வெளியான பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டு உரிமைகளை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் கமல்ஹாசனை மிரட்டி தான் விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை அவர் கைப்பற்றியதாக கூறப்பட்டு வந்தது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : கமல் சாரை மிரட்டுணீங்களானு கேட்குறாங்க, அவரை யாரும் மிரட்ட முடியாது. கமல் சார் யாருக்கும் பயந்தவர் இல்ல என உதயநிதி கூறியபோது அரங்கமே அதிர்ந்தது. மேலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்குமாறு கமலிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படியுங்கள்... Rakshan : ஒரு எபிசோடுக்கு இவ்வளவா... ரக்ஷனின் சம்பளத்தை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்