
சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகை தான் வனிதா. விஜயகுமாரின் மகளான இவர், சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சினிமாவை விட்டு விலகினார் வனிதா. அவருக்கு திருமண வாழ்க்கை சரிவர அமையவில்லை. இதனால் மூன்று முறை திருமணமாகியும், மூன்றுமே விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் வனிதா. அதில் சண்டைக்கோழியாக வலம் வந்த வனிதா, அந்நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற வைத்ததில் முக்கிய பங்காற்றினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் செம பிசியாக நடித்து வந்த இவர் திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன்படி Mrs and Mr என்கிற திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார் வனிதா. அப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்திருந்தார். இவர் வனிதாவின் முன்னாள் காதலர் ஆவார். இப்படத்தை நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் கிரண், ஷகீலா, ஆர்த்தி, கணேஷ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.
வனிதா இயக்கி ஹீரோயினாக நடித்த Mrs and Mr திரைப்படம் ஜூலை 11ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. திருமணத்துக்கு பின் குழந்தையே வேண்டாம் என அடம்பிடிக்கும் கணவருக்கும், குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் மனைவிக்கும் இடையேயான மோதலும், காதலும் நிறைந்த அடல்ட் காமெடி திரைப்படம் தான் இந்த Mrs and Mr. இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. வனிதா இயக்கிய படம் என்பதால் இதற்கு ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் ரசிகர்களை கவரவில்லை. தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கியதால் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வாஷ் அவுட் ஆனது.
இதனிடையே இப்படத்தின் மீது இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற சிவராத்திரி என்கிற பாடலை தன்னிடம் அனுமதி வாங்காமல் பயன்படுத்தி உள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபுறம் தான் முறையே அனுமதி வாங்கி தான் அப்பாடலை படத்தில் வைத்ததாகவும், இளையராஜா வேண்டுமென்றே தன் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக வனிதா கூறி உள்ளார்.
இப்படி Mrs and Mr திரைப்படத்தின் பாடல் சர்ச்சை ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, நடிகை வனிதா விஜயகுமார், திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தான் இயக்கிய Mrs and Mr திரைப்படத்தை வருகிற ஜூலை 18ந் தேதி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தியேட்டரில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் அதனை யூடியூப்பில் காசு கட்டி பார்க்கும் வண்ணம் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார் வனிதா. அண்மையில் பாலிவுட்டில் அமீர்கான் தான் நடித்த சித்தாரே ஜமீன் பர் படத்தை இதே பாணியில் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அந்த ஃபார்முலாவை தற்போது வனிதாவும் பாலோ செய்திருக்கிறார். ஒரு படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் யூடியூப்பில் வெளியாக உள்ளது இதுவே முதன்முறை ஆகும்.