பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தையும் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளதால், இப்படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொன்னியின் செல்வன் 2 படத்தை தீவிரமாக புரமோட் செய்து வருகின்றனர். இதற்கான பயணத்தை சென்னையில் தொடங்கிய படக்குழு பின்னர் கோவைக்கு சென்று அங்கு நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அடுத்ததாக தற்போது சேரநாடான கேரளாவிற்கு பறந்துள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு. இன்று கேரள மாநிலம் கொச்சின் மற்றும் எர்ணாகுளத்தில் நடைபெற உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றனர். விமானத்தில் இருந்து இறங்கியதும் அவர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றன.
இதுதவிர நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி உரையாடியபோது எடுத்த கேண்டிட் புகைப்படங்கள் மற்றும் நடிகர் விக்ரம் ஸ்டைலிஷ் லுக்கில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ஆகியவையும் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி வருகின்றன. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உடன் நடிகைகள் திரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.