
சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்குள் கால் பதித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஓவியா இருவரும் முன்னணி ரோலில் நடித்து வெளியான காமெடி டிராமா படம் மெரினா. 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.80 லட்சம். ஆனால், வசூல் குவித்தது வெறும் ரூ.30 லட்சம் தான்.
அதன் பிறகு தனுஷ் உடன் இணைந்து 3 படத்தில் நடித்திருந்தார். இதே போன்று மனம் கொத்தி பறவை படத்தில் நடித்திருந்தார். இந்த படங்கள் கொடுத்த அமோக வரவேற்பு அவரை எதிர் நீச்சல் படத்தில் நடிக்க வைத்தது. தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி இந்தப் படம் அவருக்கு பேரும், புகழும் பெற்று கொடுத்தது. மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன், அயலான், கோட் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அமரன் படத்தில் நடித்து வெளியிட்டு ஹிட் கொடுத்திருக்கிறார். தற்போது தனது 23ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதுவரையில் 21 படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு எந்தப் படமும் ரூ.120 கோடி தாண்டி வசூல் குவிக்கவில்லை. ஆனால், அமரன் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து கோல்வுட்டில் சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக அங்கீகரித்துள்ளது.
இதன் மூலமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரது வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக வசூல் குவித்த டாப் 5 படங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க. இந்தப் பட்டியலில் முதலாவதாக இருப்பது அமரன் படம் தான்.
அமரன்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் அமரன். பிக்பாஸ் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இராணுவ வீரர்களின் உணர்வை அவர்கள் படும் கஷ்டத்தை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருப்பார் இயக்குநர். சிவகார்த்திகேயனையும் சும்மா சொல்லக் கூடாது. அப்படியே இராணு வீரர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார். ரூ.110 கோடி எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகி 14 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.262.1 கோடி வசூல் குவித்துள்ளது. இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ரூ.300 கோடி வசூல் குவிக்கும் படங்களின் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டான்:
அதிக வசூல் குவித்த சிவகார்த்திகேயனின் படங்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருப்பது டான். ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.122 கோடி வசூல் குவித்துள்ளது. கல்லூரி முதல் திருமணம் வரையிலான இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர்:
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரது நடிப்பில் வெளியான ஆக்ஷன் காமெடி படம் டாக்டர். ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.102 கோடி வசூல் குவித்தது.
வேலைக்காரன்:
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத் பாசில் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் வேலைக்காரன். குடிசையில் வாழும் ஒரு இளைஞன், தனக்கு வேலை கொடுத்த நிறுவனம் உணவு கலப்படம் செய்வதற்கு எதிராக போராடும் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.87 கோடி வரையில் வசூல் குவித்தது.
அயலான்:
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் அயலான். தொலைந்து போன வேற்றுகிரகவாசி தனது வீட்டிற்கு திரும்ப உதவியை நாடுகிறார். அப்போது நடக்கும் சம்பங்கள் தான் அயலான். ரூ.45 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.81.4 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.