
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதற்கு முன்னர் வரை இளையராஜாவின் பிடியில் இருந்தது தமிழ் சினிமா, அவரை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு எந்த ஒரு இசையமைப்பாளரும் இல்லாமல் இருந்து வந்த காலகட்டத்தில் தான் சிங்கம் போல் மாஸாக எண்ட்ரி கொடுத்தார் ரகுமான். ரோஜா படம் மூலம் மக்களுக்கு புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ரகுமான்.
ரோஜா படத்திற்கு அவர் இசையமைத்த பாடல்கள் இன்று கேட்டாலும் இளமை மாறாமல் இருக்கும் அதுவே ரகுமானின் ஸ்பெஷல், அவரின் இந்த கடின உழைப்புக்கு முதல் படத்திலேயே தேசிய விருதும் வென்று அசத்தினார் ரகுமான். அப்போது ரோஜா படத்துடன் தேவர்மகன் படத்திற்காக இளையராஜாவும் போட்டியில் இருந்தார். இதில் யாருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாக்கை அளிக்கும் இடத்தில் இருந்த பாலுமகேந்திரா, ஏ.ஆர்.ரகுமானுக்கு வாக்களித்ததால் ஒரு ஓட்டில் இளையராஜாவை வீழ்த்தி தேசிய விருதை தட்டிச் சென்றார் ரகுமான்.
பின்னர் இசைப்புயலாக கோலிவுட்டில் கோலோச்ச தொடங்கிய ஏ.ஆர்.ரகுமானுக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. பின்னர் படிப்படியாக பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த உயரங்களை எட்டத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், இந்தியர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருதை கடந்த 2008-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்று பெருமை சேர்த்தார். அதுவும் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர் விருதுகள். எளிமைக்கு பெயர்போன ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் மேடையில் விருது வாங்கும் போது எல்லாப் புகழும் இறைவனுக்கே என கூறி தனது தமிழ் பற்றை வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதிலும் இன்று வரை நம்பர் 1 இசையமைப்பாளர் என்கிற அந்தஸ்துடன் வலம் வருகிறார். தற்போது இந்திய சினிமாவிலேயே மிகவும் பிசியான இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். அவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் இருக்கின்றன. குறிப்பாக தமிழில் மட்டும் கமல்ஹாசனின் தக் லைஃப், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள சூர்யா 45 என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர் ரகுமான் சாய்ரா பிரிவு; கலக்கத்தில் மகன் அமீன் வெளியிட்ட பதிவு!
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரும் ஏ.ஆர்.ரகுமான் தான். அவருக்கு ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி அதன் மூலமும் கோடி கோடியாய் வருமானம் ஈட்டி வருகிறார் ரகுமான். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாடகரும் ஏ.ஆர்.ரகுமான் தான். அவர் ஒரு பாடல் பாட ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
இதுதவிர துபாயில் அதிநவீன வசதிகளுடன் உலகத் தரத்தில் இசைக் கூடம் ஒன்றையும் வைத்திருக்கிறார் ரகுமான். மேலும் சென்னையில் அவருக்கு சொந்தமாக பிலிம் ஸ்டூடியோ ஒன்றும் உள்ளது. அதில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த வாடகைக்கு விட்டு அதிலும் நன்கு சம்பாதித்து வருகிறார் ரகுமான். இவர் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பாணு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கதீஜா, ரஹீமா என இரு மகள்களும், அமீன் என்கிற மகனும் உள்ளனர்.
மனைவி சாய்ரா பானு உடன் 29 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஏ.ஆர்.ரகுமான், நேற்று திடீரென தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.600 முதல் 650 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... முடிவுக்கு வந்த 29 வருட காதல்; ரகுமான் - சாய்ரா பிரிவுக்கு என்ன தான் காரணம்?