நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த ஜூன் மாதமே அறிவித்துவிட்டார்கள். வம்சி இயக்கியுள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து உள்ளார். நேரடி தமிழ் படமாக தயாராகி உள்ள இப்படம் தெலுங்கிலும் வாரிசுடு என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக உள்ளதால் யாருக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்திய பேட்டியில் துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி, இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என கூறி இருந்தார்.
இந்நிலையில், வாரிசு படத்துக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தால் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல் ஆந்திராவில் சங்கராந்தி என்கிற பண்டிகை கொண்டாடப்படும், அந்த சமயத்தில் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும். அந்த சமயத்தில் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிகளவு தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்கிற தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறை நடைமுறையில் உள்ளது.
அதனால் வருகிற 2023-ம் ஆண்டு சங்கராந்தி பண்டிகை சமயத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன. இந்த படங்களுக்கு போட்டியாக தான் விஜய்யின் வாரிசுடு படத்தை அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் தில் ராஜு.