அத்துமீறல் புகார்... விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பீஸ்ட் பட வில்லன்

First Published Dec 13, 2022, 11:48 AM IST

துபாயில் இருந்து கொச்சி செல்வதற்காக விமானத்தில் ஏறியபோது, விமானிகள் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதன் காரணமாக பீஸ்ட் பட வில்லன் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடி வசூலை ஈட்டினாலும், விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு, சதீஷ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

குறிப்பாக இதில் வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். அவர் நடித்த முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படம் ரிலீசான பின்னர் படத்தில் தன்னை டம்மியாக காட்டிவிட்டதாக விமர்சனங்களை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் இதற்காக வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் இது புதுசு... முதன்முறையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ரொமான்ஸ் செய்ய உள்ள பிரபல இசையமைப்பாளர்

இந்நிலையில், அவர் நடிப்பில் தற்போது பாரத் சர்க்கஸ் என்கிற மலையாள படம் வெளியாகி உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக அண்மையில் துபாய் சென்றிருந்தார் ஷான் டாம் சாக்கோ. புரமோஷன் பணிகளை முடித்துவிட்டு துபாயில் இருந்து கொச்சி செல்வதற்காக விமானத்தில் ஏறியபோது, விமானிகள் அறை எனப்படும் காக்பிட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை அத்துமீறலாக கருதப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அவரை உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதோடு, அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் முடிந்த பின்னர் அவரை வேறு ஒரு விமானத்தில் கொச்சி செல்ல அனுமதிக்கப்பட்டாராம். பிரபல நடிகர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகி... உலக அளவில் கெத்து காட்டும் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’

click me!