பாகுபலி படங்களின் வெற்றிக்கு பின்னர் ராஜமவுலி இயக்கிய படம் தான் இரத்தம் ரணம் ரெளத்திரம். சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர் என அழைக்கப்படும் இப்படத்தில் நாயகர்களாக ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தனர். இதில் ராம்சரண் சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர். கொமரம் பீம் ஆகவும் நடித்திருந்தனர். இரு சுதந்திர போராட்ட வீரர்களின் நட்பை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் ராஜமவுலி.
அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜப்பானில் ரிலீசாகி அங்கும் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க இப்படத்திற்கு ஆஸ்கார் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.