
2025-ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்துவிட்டது. தற்போது இரண்டாம் பாதியில் அடியெடுத்து வைத்துள்ளது கோலிவுட். முதல் பாதியில் கோலிவுட்டுக்கு பெரியளவில் வெற்றி கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் அள்ளிய படம் என்றால் அது அஜித்தின் குட் பேட் அக்லி தான். மற்ற படங்கள் எல்லாம் அதற்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்தின் மீது தான் அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. அடுத்த 6 மாத காலகட்டத்தில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் நடிகர் சித்தார்த், சரத்குமார், தேவையானி நடித்த 3பிஹெச்கே திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஜூலை 4ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதனுடன் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த பறந்து போ திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. மேலும் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் பீனிக்ஸ் திரைப்படமும் ஜூலை 4ந் தேதி திரைக்கு வருகிறது. இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வருகிற ஜூலை 25ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் ஜூலை 11ந் தேதி எழில் இயக்கிய தேசிங்கு ராஜா 2 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
ஆகஸ்ட் மாதம் தான் தமிழ் சினிமாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாதமாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமான ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ஆகஸ்ட்டில் தான் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் செப்டம்பர் 5ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுதவிர செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் மற்றுமொரு திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 18ந் தேதி திரைக்கு வர உள்ளது.
அக்டோபர் 1ந் தேதி நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இதற்கு போட்டியாக காந்தாரா 2 படமும் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதால், அதற்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் தயாராகி வரும் டியூடு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள கருப்பு ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இதனுடன் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்கும் படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
நவம்பர் மாதம் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். இதுதவிர நடிகர் தனுஷ், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்துள்ள தேரே இஸ்க் மெய்ன் திரைப்படமும் நவம்பர் மாதம் 28ந் தேதி தான் திரைக்கு வர உள்ளது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள 7ஜி ரெயின்போ காலனி திரைப்படமும் நவம்பர் 6ந் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
டிசம்பர் மாதம் பிரபாஸ் ஹீரோவாக நடித்த ராஜா சாப் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை மாருதி இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படம் டிசம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.