Tamil Film Active Producers Association : சினிமா விமர்சனங்களை படம் வெளிவந்த மூன்று நாட்களுக்கு வெளியிட தடைவிதிக்க கோரி தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சினிமா விமர்சனங்கள் என்பது தற்போது ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது. படத்தின் முதல் ஷோ பார்த்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களை பார்த்த பின்னர் படத்துக்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இதனால் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன.
சமீபத்தில் கூட இந்தியன் 2, கங்குவா போன்ற படங்களின் படு தோல்விக்கு காரணம் அதன் விமர்சனங்கள் தான். அதிலும் கங்குவா படத்தை கடுமையாக ட்ரோல் செய்து அதிகளவில் விமர்சனங்கள் வந்ததால் அப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த சினிமா விமர்சனங்களை தடை செய்யக் கோரி திரைத்துறையினர் சார்பிலும் தயாரிப்பாளர்கள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சினிமா விமர்சனங்களை வெளியிட தடை கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்கு எந்தவித விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்துள்ள இந்த வழக்கு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் மாறி இருக்கிறது. இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நல்ல படமாக இருந்தால் அதை ஓட வைப்பதில் விமர்சனங்கள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. ஒருவேளை தடை விதித்தால் சின்ன படங்கள் கடும் பாதிப்பை சந்திக்கக்கூடும் என தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.