
Kanguva Box Office Collection Day 2 : சிறுத்தை சிவா மற்றும் சூர்யா காம்போவில் முதல் முறையாக வெளியான படம் கங்குவா. கடந்த 14 ஆம் தேதி திரைக்கு வந்த காவிய கற்பனை படமான கங்குவாவின் வசூல் நிலவரங்களை இந்தப் பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக இயக்குநர் சிவாவிற்கு குடும்பக் கதைகள் தான் ஹிட் கொடுத்திருக்கிறது. கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சிவா, நடிகர் அஜித் குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்து மாஸ் இயக்குநரானார்.
இதில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் குடும்பக் கதையை கொண்ட படங்கள். விவேகம் மட்டும் சற்று வித்தியாசமாக ஆக்ஷனில் வெளி வந்திருந்தது. அஜித்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அண்ணாத்த படத்தை கொடுத்தார். ஆனால், அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் கூட ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்தது. இந்த படம் அண்ணன் – தங்கை கதையை வைத்து வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தான் சிவாவின் அடுத்த டார்க்கெட் சூர்யாவாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஹிட் கூட கொடுக்காத சூர்யா கங்குவா படத்தை மட்டுமே நம்பியிருந்தார். படத்தின் புரோமோஷனில் கொஞ்சம் இல்ல நிறையவே பில்டப் கொடுத்தார். அவர் பில்டப் கொடுத்ததுக்கும், படத்துக்கும் ஒன்னும் சம்பந்தமே இல்லாத மாதிரி கங்குவா எதிர்மறையான விமர்சனங்களை வாரி குவித்தது.
முக்கிய காரணம் படத்தில் வரும் சத்தமும், இரைச்சலும் தான். படம் முழுவதும் கத்திக் கொண்டே இருப்பதாகவும், இசையின் சத்தமும் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இசையின் சத்தம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் கொடுத்திருந்தார். சவுண்ட் மிக்ஸிங்கில் வந்த பிரச்சனை தான் இது என்றும், 2 புள்ளிகள் குறைத்து பயன்படுத்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
சிவா மற்றும் சூர்யா காம்போவில் கங்குவா ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா படத்தில் சூர்யா உடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு, கருணாஸ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், ஆனந்தராஜ், வையாபுரி, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் முதல் நாளில் ரூ.36 கோடி வசூல் குவித்திருந்த நிலையில் 2ஆவது நாளில் உலகம் முழுவதும் சற்று கூடுதலாக வசூல் குவித்து 2 நாட்களில் மொத்தமாக ரூ.58.62 கோடி வசூல் குவித்துள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று மாலை வரை கங்குவா உலகளவில் ரூ.58.62 கோடி வசூல் குவித்ததாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
கங்குவா வசூல் குறித்து ஸ்டூடியோ க்ரீன் கூறியிருப்பதாவது: உலகெங்கிலும் உள்ள பாக்ஸ் ஆபிஸில் அனைவராலும் பாராட்டப்பட்டது. கங்குவா ரூ.58.62 கோடி வசூல் செய்துள்ளது. இதனை ஏற்படுத்திய அன்பான ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கங்குவா வெற்றிகரமாக ஓடுகிறது என்று பதிவிடப்பட்டுள்ளது.
பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், 7ஆம் அறிவு, 24 ஆகிய படங்களுக்கு பிறகு சூர்யா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம் கங்குவா. இரட்டை வேடம் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தாலும் இயக்குநர்கள் சமாதானப்படுத்தி நடிக்க வைத்துவிடுகிறார்கள். எனினும், இரட்டை வேடங்களில் நடிக்கும் போது எனக்கும், இயக்குநருக்கும் இடையில் வாக்குவாதங்கள் இருந்தன என்று சூர்யா கூறியிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் எதற்கும் துணிந்தவன். கடந்த 2022ல் திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு பிறகு தற்போது கங்குவா வெளியாகியிருக்கிறது. எதற்கும் துணிந்தவன் படமும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. 2021ல் திரைக்கு வந்த ஜெய் பீம் படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால், அந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
கங்குவா மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் வந்த மெய்யழகன் படமும் ரசிகரளிடையே பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2024 சூர்யாவுக்கு ஒரு சோதனையான வருடமாக அமைந்துவிட்டது. தற்போது சூர்யா தனது 44ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.