
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் வேட்டையன். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் பேசியதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அவர் பேசியதாவது : “ஜெயிலருக்கு பின் இப்போ வேட்டையன் படத்துக்காக இங்க வந்திருக்கிறேன். ஒரு டைரக்டருக்கு ஒரு படம் தோல்வி அடைந்தால் அடுத்து அவர்கள் ஹிட் கொடுக்குற வரைக்கும் அவர்களுக்கும் நிம்மதியே இருக்காது. அதேபோல் ஒரு இயக்குனர் ஹிட் கொடுத்துவிட்டாலும் அவருக்கு நிம்மதி இருக்காது. முந்தைய படத்தை விட சிறப்பா கொடுக்கனும் இல்லேனா அந்த படம் மாதிரி இல்லைனு சொல்லிவிடுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நல்ல இயக்குனர்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. வெற்றிமாறன்லாம் இருக்கிறார்... முந்தைய காலகட்டத்தில் கதை, திரைக்கதை ஒருவருடையதாக இருக்கும் டைரக்ஷன் ஒருவருடையதாக இருக்கும். இன்றைக்கு எல்லாமே ஒரே ஆளாக செய்கிறார்கள். ஒரு படம் ஹிட் ஆக மாஸ் ஹீரோக்கள் இருந்தால் போதாது நல்ல தயாரிப்பு நிறுவனமும் அவசியம். அப்போ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
நான் ஜெய் பீம் படம் பார்த்தேன் படமும் நன்றாக இருந்தது. நல்ல படங்களை பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள நான் ஜெய் பீம் படத்துக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கல. அப்புறம் தான் ஒரு நாள் செளந்தர்யா என்னிடம் ஞானவேல்கிட்ட ஒன்லைன் இருப்பதா சொன்னாங்க. சரினு அவரை சந்தித்த போது நீங்க படத்துல மெசேஜ் சொல்லுவீர்கள், அதெல்லாம் நமக்கு செட் ஆகாது. மக்கள் கொண்டாடும்படி கமர்ஷியலா படம் இருக்கனும் என சொன்னேன்.
அவரும் ஒரு 10 நாட்கள் டைம் கேட்டார். ஆனால் இரண்டே நாளில் கால் பண்ணி நான் கமர்ஷியலா பண்ண ரெடி.. ஆனா நெல்சன், லோகேஷ் கனகராஜ் மாதிரி இல்லாமல் மக்கள் உங்களை ரசிப்பது போல் வேறு ஒரு கண்ணோட்டத்தில் உங்களை காட்டுகிறேன் என சொன்னார். அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு 100 சதவீதம் அனிருத் தான் இசையமைப்பாளரா வேண்டும் என்று சொன்னார் ஞானவேல், நானும் 1000 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என கூறினேன்.
பின்னர் படத்துல வில்லன் யாருன்னு கேட்டப்போ, ராணா நடிப்பதாக சொன்னார். அதேமாதிரி பகத் பாசிலும் ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரத்தில் வருவதாக சொன்னார். பகத் பாசிலிடம் பேசியபோது அவர் சம்பளமே வேண்டாம் நான் நடிக்கிறேன்னு சொன்னதாக ஞானவேல் என்னிடம் கூறினார்.
இதையும் படியுங்கள்... அமிதாப் வேடத்தில் நடிக்க வேண்டியவர் அவர் தான்; வேட்டையன் ஆடியோ லாஞ்சில் ரஜினி உருக்கம்!
ஆனா இன்னைக்கு அவரிடம் டேட்ஸ் இல்ல. எனக்காக லோகேஷ் காத்துக்கிட்டு இருக்கார். அவரிடம் ஷூட் தள்ளி வைக்கலாமா என கேட்டேன். உடனே அவரும் ஓகே சொன்னார். அப்புறம் தான் தெரிஞ்சது அவர் கதையே இன்னும் சரியா பண்ணி முடிக்கவில்லை என்று.
ராணாவை வில்லனாக பார்க்கும்போது எனக்கே பயம் வந்துவிடும். பகத் என்னமாதிரி ஒரு ஆக்டர்... ரொம்பவே யதார்த்தமாக நடித்தார். மஞ்சு வாரியர் ஹீரோயினா நடிக்கிறதா சொன்னார்கள். அவரை அசுரன் படத்தில் பார்த்திருந்தேன். ஆனா நேர்ல சும்மா தக தகனு இருந்தார். அமிதாப் பச்சன் பற்றி இன்றைய 2கே கிட்ஸுகளுக்கு தெரியாது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமிதாப்பும் ஒன்றாக படித்தவர்கள்.
அமிதாப் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் நஷ்டம் அடைந்தார். அப்போ மும்பையே அவரை பார்த்து சிரித்தது. நல்ல இடத்துக்கு போனா எப்போ கீழே விழுவாங்கனு நிறைய பேர் காத்திருப்பார்கள். அப்புறம் டிவி நிகழ்ச்சி, ஷூ பாலிஷ் முதல் பல் பொடி வரை நிறைய விளம்பரங்களில் நடித்தார். நஷ்டமானபோது விற்ற வீடுகளை எல்லாம் மீண்டும் வாங்கினார். வாழ்க்கை மேலே கீழே என நகர்ந்துகொண்டே இருக்கும். சகுனிகள் இருக்கிற இந்தச் சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பொழச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும். இந்தப்படம் ஞானவேலுக்காக ஹிட் ஆக வேண்டும் என சொல்லி தன் உரையை முடித்துக் கொண்டார் ரஜினி.
இதையும் படியுங்கள்... லோகேஷின் LCU மாதிரி.. தனுஷின் DCU உருவாகிறதா? "இட்லி கடை" பற்றி தீயாய் பரவும் தகவல்!