கன்னட திரையுலகில் வெளியாகும் படங்களுக்கு தற்போது இந்தியா முழுவதும் மவுசு கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் கே.ஜி.எஃப் படம் தான். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த அப்படத்தின் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தன. குறிப்பாக கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் 1200 கோடிக்கு மேல் வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் தான் காந்தாரா. ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கியிருந்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
இவ்வாறு தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வரும் காந்தாரா திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில வாரங்களுக்கு முன் அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டினார். அதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், இந்த சந்திப்பின் போது சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார் மற்றும் அவர் கொடுத்த பரிசு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.