Sundar c Birthday
தமிழ் சினிமாவின் ஹிட்மேன் என்றால் அது சுந்தர் சி தான். கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அரண்மனை 4 படம் மூலம் முதல் வெற்றியை கொடுத்த சுந்தர் சி, 2025-ம் ஆண்டும் மதகஜராஜா படம் மூலம் முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். இரண்டு படங்களின் தொடர் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் செம பிசியான இயக்குனராக உருவெடுத்துள்ள சுந்தர் சி இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gangers movie
கேங்கர்ஸ்
சுந்தர் சி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தை அவ்னி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.
Mookuthi amman 2
மூக்குத்தி அம்மன் 2
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் மூக்குத்தி அம்மன். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி தான் இயக்க உள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வசூல் ராஜாவாக மாறிய மதகஜராஜா! 8 நாட்களில் இத்தனை கோடி கலெக்ஷனா?
Kalakalapu 3
கலகலப்பு 3
சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட காமெடி படங்களில் கலகலப்பு திரைப்படமும் ஒன்று. அப்படத்தின் முதல் பாகம் 2012-ம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2018-ம் ஆண்டும் ரிலீஸ் ஆகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், அதன் மூன்றாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இப்படத்தில் விமல், மிர்ச்சி சிவா நாயகர்களாக நடிக்க உள்ளனர். இப்படத்தினை கண்ணன் ரவி தயாரிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
Aranmanai 5
அரண்மனை 5
சுந்தர் சி இயக்கியதில் தொடர் வெற்றியை பெற்று வரும் படம் அரண்மனை சீரிஸ். இதுவரை இப்படத்தின் நான்கு பாகங்கள் வெளிவந்துள்ளன. அதில் கடந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை படத்தின் நான்காம் பாகம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. இதையடுத்து அரண்மனை 5ம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளார் சுந்தர் சி. விரைவில் இப்படமும் உருவாக உள்ளது.
இதையும் படியுங்கள்... விஷாலை என் வாழ்க்கையில் திரும்ப பார்க்கவே கூடாதுனு நினைச்சேன் - சுந்தர் சி ஓபன் டாக்