தமிழ் சினிமா ரசிகர்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய குரலால் கட்டிப்போட்டு வைத்தவர் எஸ்பிபி. அவரின் 79வது பிறந்தநாள் இன்று. பாடகர் மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்தார் எஸ்பிபி. 1964-ம் ஆண்டு சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று பாட்டுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கல்லூரி சார்பாக கலந்துகொண்ட எஸ்பிபிக்கு முதல் பரிசு கிடைத்தது. அதுதான் அவரது வாழ்க்கை பயணத்தை திசைத் திருப்பி பாடகனாக்கியது.
25
எஸ்பிபி அறிமுகம்
சாந்தி நிலையம் படத்திற்கு முதல் பாடலை பாடி இருந்தாலும் எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடல் அதற்கு முன் வெளியாகி கோடான கோடி தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 1980-ம் ஆண்டு வெளியாகிய சங்கராபரனம் திரைப்படத்தில் அவர் பாடிய கர்நாடக இசைப் பாடல்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் முறையாக கர்நாடக சங்கீதம் கற்காமலேயே அந்த பாடல்களை திறம்பட பாடி இருந்தார். இந்த படத்தின் பாடல்களுக்காக எஸ்பிபி தேசிய விருதும் வென்றார்.
35
இசையமைப்பாளர்களின் பேவரைட்டாக இருந்த எஸ்பிபி
1996-ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடலுக்காக தேசிய விருதை வென்றார் எஸ்பிபி. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இசையில் பாட ஆரம்பித்த எஸ்பிபி, ஜிவி பிரகாஷ் வரை அனைவரது இசையிலும் பாடல்கள் பாடி இருக்கிறார். இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் என கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய ஒரே பாடகர் எஸ்பிபி மட்டுமே.
தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 40 ஆயிரம் பாடல்கள் வரை பாடி உலக சாதனை படைத்திருக்கிறார் எஸ்பிபி. ஆறு முறை தேசிய விருது, நான்கு முறை பிலிம்பேர் விருது, 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றை பெற்ற ஒரே கலைஞன் எஸ்பி பாலசுப்ரமணியம் மட்டுமே. நடிகர் கமல்ஹாசன், ரகுவரன், பாக்கியராஜ், சல்மான் கான் மற்றும் ரஜினி ஆகியோரின் படங்களை பிற மொழியில் டப் செய்யும்போது அவர்களுக்காக பிற மொழிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
55
எஸ்பிபி பிறந்தநாள்
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் எஸ்பிபி. எனினும் உலகம் உள்ளவரை தனது பாடல்கள் மூலம் ரசிகர்களின் காதுகளில் நுழைந்து இதயத்தை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டே இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவரின் 79வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள். ‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ என அவர் பாடியதை போல் அவரது இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.