
திரையுலகில் காமெடி நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே. முந்தைய காலத்தில் கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்கள் காமெடியனாகவும், ஹீரோவாகவும் ஒரு கலக்கு கலக்கியிருந்தனர். அவர்களுக்குப் பின்னர் கவுண்டமணி, வடிவேல், விவேக் போன்றவர்கள் கதாநாயகனாக நடிக்க முயற்சி செய்தனர். ஆனால் இது அவர்களுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.
கவுண்டமணி, விவேக் ஆகியோர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்க முயன்று தோல்வியை தழுவியப் பின்னர் மீண்டும் காமெடிக்கே திரும்பி விட்டனர். வடிவேலுவுக்கு ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மட்டுமே நன்றாக ஓடியது. அதன் பின்னர் அவர் ஹீரோவாக நடித்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இவர்களுக்குப் பின் வந்த நடிகர் சந்தானம் காமெடி டிராக்கை கைவிட்டு, ஹீரோவாக களம் இறங்கினார். கடந்த 11 வருடங்களாக ஹீரோவாக நடித்து வரும் அவருக்கு பல படங்கள் தோல்வியைக் கொடுத்துள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமான சந்தானம் 2008-ம் ஆண்டு வெளியான ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் அவர் காமெடியனாக நடித்திருந்தார். அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வரவே, காமெடிக்கு முழுக்கு போட்டுவிட்டு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். ஆனால் ‘தில்லுக்கு துட்டு’ போன்ற சில படங்கள் மட்டுமே வெற்றியடைந்தது.
சந்தானத்தைத் தொடர்ந்து காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சூரி. அவர் ஹீரோவாக அறிமுகம் ஆன ‘விடுதலை’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறவே, தொடர்ந்து ‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களில் நடித்தார். சூரியின் ‘மாமன்’ திரைப்படமும், சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் டிடி நெக்ஸ்ட் லெவல் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ‘மாமன்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை முந்தி உள்ளது.
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடிப்பதற்காக சந்தானம் ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாகவும், ‘மாமன்’ படத்தில் நடிக்க சூரி ரூ.8 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்தானத்திற்கு பிறகு நடிக்க வந்த சூரி அவரை விட முன்னணியில் இருக்கிறார். ஹீரோவாக சந்தானத்தை சூரி மிஞ்சினாலும் இன்னும் காமெடியனாக சந்தானம் சூரியை விட உயரத்தில் தான் இருக்கிறார். STR 49 படத்தில் காமெடியனாக சந்தானம் நடிப்பதற்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்கு சந்தானத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஹீரோ டிராக்கை கைவிட்டு இனி காமெடியனாக சந்தானம் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.