
இன்று ஆடம்பரமான பங்களாக்களில் வசிக்கும் பல திரையுலக நட்சத்திரங்கள், ஒரு காலத்தில் தூங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்துள்ளனர். அல்லது குடும்பத்துடன் ஒரே அறையில் வாழ்ந்தனர். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம், இப்போது தனது நடிகர்களை விட 30 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார். இந்த நட்சத்திரம் சில கிளாசிக் கிளாசிக் படங்கள் மற்றும் பிளாக்பஸ்டர்களை வழங்கி உள்ளார். இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே பல நடிகர், நடிகைகளின் கனவாக உள்ளது. அவர் வேறு யாருமல்ல இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி தான்.
சஞ்சய் லீலா பன்சாலி ஒரு சேரியில் பிறந்தார். 10க்கு 10 அறையில் தனது குடும்பத்துடன் வசித்துள்ளார். பாலிவுட்டில் தயாரிப்பாளராகத் தோல்வியடைந்ததால், தனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். பின்னர் அவரது தாயாரே முழுப் பொறுப்பையும் ஏற்று டெயிலராக பணிபுரிந்து தனது குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். எனவே தனது தாயாருக்கு உதவுவதற்காக, அவரும் சில நேரம் தையல் வேலைகளை செய்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி ஒருமுறை அளித்த பேட்டியில், “நாங்கள் மிகவும் ஏழ்மையான வீட்டில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டு சுவர்களில் பெயிண்ட் இருக்காது.. அம்மா ஒரு அற்புதமான நடனக் கலைஞர், எனவே அவர் அந்த சிறிய (இடத்தில்) நடனமாடுவார். எங்களிடம் உடுத்துவதற்கு நல்ல ஆடைகள் இல்லை. அதனால், சிறுவயதில் நான் இழந்த பல விஷயங்கள் இருந்தன. என் மனம் எப்போதும் ஒரு திரைப்பட இயக்குனரின் மனமாகவே இருந்தது.
சிறுவயதில் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்யும் போது, சுவர் என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்று யோசிப்பேன். அந்த அழகின்மையிலோ, அல்லது இடப்பற்றாக்குறையிலோ அழகு தேடுவதில் என் மனம் மும்முரமாக இருந்தது. அதன் காரணமாக எனது படங்களின் செட்டுகள் மிகப்பெரியதாக பிரம்மாண்டமாக இருந்தது.” என்று கூறியிருந்தார்.
பாலிவுட்டில் உதவி இயக்குநராக பணிபுரியத் தொடங்கிய சஞ்சய் லீலா பன்சாமி, காமோஷி: தி மியூசிகல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். எனினும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. பின்னர் ஹம் தில் தே சுகே சனம் மற்றும் தேவதாஸ் ஆகிய காதல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார் சஞ்சய் லீலா பன்சாலி.
பிளாக், குஸாரிஷ், ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி, கங்குபாய் கத்தியவாடி என பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார். தற்போது நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ள அவர் சமீபத்தில் ஹீராமண்டி என்ற வெப் சீரிஸை இயக்கி இருந்தார்.
ஹீராமண்டி சீரிஸில் நடித்த நடிகர்களை விட சஞ்சய் லீலா பன்சாலி 30 மடங்கு வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வெப்சீரிஸுக்காக அவர் 60-70 கோடி ரூபாய் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இது அவரை பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக மாற்றி உள்ளது.
நாட்டின் பணக்கார இயக்குனர்களில் ஒருவராகவும் சஞ்சய் லீலா பன்சாலி இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 940 கோடி என்று கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் (ரூ. 450 கோடி), பிரபாஸ் (ரூ. 250 கோடி), மற்றும் ஐஸ்வர்யா ராய் (ரூ. 862 கோடி) போன்ற சில பெரிய நட்சத்திரங்களை விட பணக்காரராக இருக்கிறார்.
தற்போது, சஞ்சய் லீலா பன்சாலி லவ் & வார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை 2025-ல் வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.