நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற உள்ளதாகவும், அதற்காக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, டெல்லியில் உள்ள அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தீயாய் பரவின.
இந்நிலையில் விஜய் பெயரில் நான் தான் கட்சி ஆரம்பித்தேன் என அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்தார். அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கான பதிவிற்காக தான் தான் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்ததாகவும், இதற்கும் விஜய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஜய் அப்பா கட்சி ஆரம்பித்திருப்பதையே டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றும், எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து எஸ்.ஏ.சி.யின் கட்சியின் பொருளாளரான அவருடைய மனைவி ஷோபா மகன் பக்கம் சேர்ந்து கொண்டதோடு, கட்சியை விட்டு விலகியதாகவும் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் விஸ்வாசியும், அவர் ஆரம்பித்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா தனது தலைவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார். இதற்கும் போலீஸ் தரப்பிலிருந்து விஜய் கொடுத்த அழுத்தம் தான் காரணம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாராம். அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.