தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் ரசிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார் சூர்யா. அந்த சந்திப்பின் போது தனது நடிப்பில் உருவாக உள்ள அடுத்த 5 படங்களின் அப்டேட்டுகளை அவர் கூறி இருக்கிறார். அதன் விவரத்தை பார்க்கலாம்.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இப்படம் குறித்து பேசுகையில், தாங்கள் ஷூட்டிங்கிற்கு முன் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
வாடிவாசல்
சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கும் ஒரு படம் என்றால் அது வாடிவாசல் தான். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதிலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய சூர்யா, வெற்றிமாறன் விடுதலை 2-ம் பாகத்தின் ஷுட்டிங்கை முடித்த பின்னர் வாடிவாசல் தொடங்கும் என கூறி உள்ளார்.
ரோலெக்ஸ்
விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலெக்ஸ் என்கிற கேமியோ கதாபாத்திரம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து தனி படம் எடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதுகுறித்த அப்டேட்டையும் சூர்யா கொடுத்துள்ளார். அதன்படி ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் ஒன்று உருவாக உள்ளதாகவும், இதற்காக லோகேஷ் சொன்ன கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறி இருக்கிறார்.