
நடிகர் ஆர். ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் சொர்க்கவாசல். இப்படம் வருகிற நவம்பர் 29-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது : "அனைவருக்கும் வணக்கம். பிரதமர், ஜனாதிபதி, முதலமைச்சர் ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம் என நினைக்கிறேன். இந்த டீம் உடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய புதுமுக கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதை பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இன்னும் பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள், இப்படத்தின் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள்.
செல்வராகவன் ஸ்கிரீன்ல வந்தாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் மிக குறைவு. படப்பிடிப்பு தளத்தில் அனைவருடனும் மிக குறைவாகவே பேசுவார்.
இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் இப்படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் தான் தற்போது நடித்திருக்கிறேன்.
இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது அதற்கு காரணம் என் மனைவி தான். 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் தொடங்கிய என்னுடைய நடிப்பு பயணம் இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. இதுவரை என்னுடைய எந்த பட விழாவிற்கும் வருகை தராத என் மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இது என்பதால் எனக்கு ஸ்பெஷல்.
இதற்கு முன்பு வரை ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், பேச எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்ல, படத்தின் கன்டென்ட் நல்லா இருந்தா அது மக்களிடம் ரீச் ஆகிவிடும். 2006ம் ஆண்டிலிருந்து நான் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்! கங்குவா தான் காரணமா?
விற்பனைக்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்றால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது. இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் பிடித்திருக்கா, பிடிக்கலையா என விமர்சனம் செய்வார்கள். ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம்.
யாருடைய செல்போனையும் பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் சூப்பரா இருக்கு என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போதெல்லாம் பயம் அதிகமா இருக்கு, வெளியில் தேசியக்கொடியை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு நின்றால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.
நான் பாவாடையோ, சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐடி விங்கிடமும் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்ருங்க. சினிமாவில் வாரந்தோறும் படங்கள் வெளியாகின்றன. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீங்க.
அதேபோல் ரசிகர்களிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்க. அது உங்களோட உரிமை. ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும், இவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்கிற வேலையை மட்டும் செய்யாதீர்கள். ஒருவரை டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கோம். அனைவரின் ஆதரவு இருந்தால் தான் இந்த படமும் ஒரு லப்பர் பந்து போன்றோ அல்லது வாழை படம் போன்றோ வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
இதையும் படியுங்கள்... சிகரெட் பிடிப்பதை விட்டுவிட சொன்ன எம்ஜிஆர்.! ரஜினி சொன்ன ருசிகர சம்பவம்