Jailer 2 Making Video Released : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஜெயிலர் படமும் ஒன்று. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயிலர், கடந்த 2023-ம் ஆண்டு ரிலீசாகி உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, சிவ ராஜ்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
24
ரஜினிகாந்த் ஜெயிலர் 2
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த ஜனவரி 14ந் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த ப்ரோமோவில் ரஜினிகாந்துடன் நெல்சன் மற்றும் அனிருத்தும் நடித்திருந்தனர். ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.
34
நெல்சன் திலீப்குமார் அண்ட் ரஜினிகாந்த்
ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத் தான் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த மேக்கிங் வீடியோ கடந்த ஆண்டு வெளியான புரோமோ வீடியோவின் தொடர்ச்சி தான்.
இதில் ரஜினிகாந்திற்கு படத்தின் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று நெல்சன் திலீப்குமார் கற்றுக் கொடுக்கிறார். இந்த மேக்கிங் வீடியோவில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காட்சியில் அனிருத்தும் இடம் பெற்றுள்ளார். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் ரஜினி நடித்த உழைப்பாளி, சிவாஜி தி பாஸ், காலா ஆகிய படங்கள் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அந்த பட்டியலில் ஜெயிலர் 2 படமும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.