பான் இந்தியா படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் என்றால் அது பாகுபலி தான். பாகுபலி: தி பிகினிங் 2015 இல் திரையரங்குகளில் வெளியானது. மொழி எல்லைகளைக் கடந்து சாதனைகளை படைத்தது. உலகளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்தியப் படமாக அப்போது பாகுபலி உருவெடுத்தது. பான் இந்தியா என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை கொடுத்தது பாகுபலி தான். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
24
வரலாறு படைத்த பாகுபலி
வசூல் சாதனைகளுக்கு அப்பால், படத்தில் நடித்த நடிகர்களின் உழைப்பு வெகுவாக பாரட்டப்பட்டது. குறிப்பாக பிரபாஸின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. பாகுபலியின் கதையை எஸ்.எஸ். ராஜமௌலியின் தந்தை வி. விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களுக்கான அளவுகோலையே மாற்றியமைத்தது பாகுபலி. படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவான இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றளவும் பிரபலமாக உள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 2017 இல் வெளியான பாகுபலி 2: தி கன்க்ளூஷன் என்கிற பெயரில் வெளியானது. இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகளை படைத்தது. இந்த நிலையில், ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் முதல் பாகம் மீண்டும் திரைக்கு வருகிறது. அப்படம் வெளியாகி பத்தாம் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு பாகுபலி: தி பிகினிங் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அக்டோபரில் அப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
44
பாகுபலி மூலம் உச்சம் தொட்ட ராஜமெளலி
இந்திய சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தி பிரபாஸின் திரைவாழ்க்கையையே மாற்றியமைத்த படத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் என்கிற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை இயக்கிய ராஜமெளலி அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். அப்படத்தில் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.