மஹா கும்பமேளாவில் புனித நீராடினாரா பிரகாஷ் ராஜ்? புயலை கிளப்பிய புகைப்படம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடியதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடியதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பிரகாஷ் ராஜ் இந்திய திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர், ஒவ்வொரு படத்திலும் தனது பன்முகத்தன்மையை நிரூபித்து இருக்கிறார். ஆனால், பல ஆண்டுகளாக, சர்ச்சைக்குரிய நடிகர்களில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார். பொதுவாக, தென்னிந்திய நடிகர்கள் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருப்பார்கள். ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் மற்ற நடிகர்களிடமிருந்து வித்தியாசமானவர்.
தற்போதைய சூழ்நிலை குறித்தும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதற்காக பாஜகவினரால் அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்படுவதும் உண்டு. குறிப்பாக பட வாய்ப்பு குறைந்ததால், மோடியை விமர்சித்து அவர் புகழ் வெளிச்சம் தேடிக் கொள்வதாக அவர்கள் கடுமையாக சாடுவர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் பிரகாஷ் ராஜ்.
இதையும் படியுங்கள்... ஷாக்கிங் நியூஸ்! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் உயிரிழப்பு! பலர் காயம்!
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். இதேவேளையில், கடவுள் நம்பிக்கையே இல்லாத பல பிரபலங்கள் புனித நீராடியதாக குறிப்பிட்டு AI புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகின்றன. அந்த புகைப்பட சர்ச்சையில் பிரகாஷ் ராஜும் சிக்கி உள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பிரகாஷ் ராஜின் AI புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை சமூக ஆர்வலரும் நடிகருமான பிரசாந்த் சாம்பர்கி இணையத்தில் பகிர்ந்து, கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடினார் என்றும் இதன்மூலமாவது அவரது அனைத்து பாவங்களும் நீங்கட்டும் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் உண்மை என நினைத்து பலரும் பிரகாஷ் ராஜை ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரசாந்த் சம்பர்கியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் போட்டுள்ள பதிவில், இது போலிச் செய்தி. “போலி ராஜாவின்” கோழைப் படையினருக்கு; அவர்களின் புனித பூஜையிலும் போலிச் செய்தி பரப்பி அசிங்கப்படுத்துவதே வேலையாகிவிட்டது. போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது சில நெட்டிசன்கள் பிரகாஷ் ராஜின் இந்தப் பதிவை டிரோல் செய்கிறார்கள். அதற்குக் காரணம், 'புனித பூஜையிலும்' என்ற வார்த்தையை அதில் அவர் பயன்படுத்தியது தான். கடைசியில் கும்பமேளா நீராடல் புனித பூஜை என்று ஒப்புக்கொண்டார்களே, அதுபோதும். கடைசியில் உண்மை வெளிப்பட்டது என்று கூறும் சில நெட்டிசன்கள், இதுபோன்ற உண்மையை வெளிக்கொண்டு வந்த AIக்கு நன்றி என்றும் கூறுகிறார்கள்.
இதையும் படியுங்கள்... மகா கும்பமேளா: ராணுவக் கட்டுப்பாடு ஏன் இல்லை? - பிரேமானந்த் பூரி கேள்வி!