
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்திருக்கும் மலைப்பிரதேசம் தான் வயநாடு. கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் பலரது பக்கெட் லிஸ்ட்டில் வயநாடு கண்டிப்பாக இருக்கும். ஆனால் கடந்த ஜூலை 30ந் தேதி அங்கு நடந்த சம்பவத்தை அடுத்து வயநாடுக்கு செல்ல பலரும் பயப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு தான். ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
அன்றைய தினம் இரவில் வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த பலரும் காலையில் மண்ணுக்குள் கிடந்தனர். இதுவரை 400க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் 100-க்கும் மேற்பட்ட மக்களின் நிலை தெரியாமலும் அவர்களின் உடல்கள் கிடைக்காமலும் அவர்களின் உறவினர்கள் திண்டாடி வருகின்றனர். அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினரே இப்படி ஒரு பேரழிவை பார்த்ததில்லை என கண்ணீர் சிந்தினர்.
அந்த அளவுக்கு பெரும் சேதத்தை சந்தித்து இருக்கிறது வயநாடு. அங்கு உயிர்பிழைத்த மக்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடிக்கும் சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை வயநாடு மக்களுக்கு செய்து வருகின்றனர். கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய், அஜித் போன்ற தமிழ் நடிகர்கள் வயநாடு மக்களுக்காக எந்தவித நிவாரண நிதியையும் இதுவரை வழங்கவில்லை என்றாலும் வயநாடு மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என பல பிரபங்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... கர்ணனாக மாறி... வயநாடு மக்களுக்கு நிவாரண நிதியை வாரி வழங்கிய தனுஷ்... அதுவும் இவ்வளவா?
மலையாள நடிகர்கள்
மலையாள நடிகர்களில் அதிகபட்சமாக நடிகர் மோகன்லால், மீட்பு பணிகளுக்காக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் மம்முட்டி 20 லட்சமும், அவரது மகன் துல்கர் சல்மான் 15 லட்சமும் வழங்கினர். மலையாள திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நடிகர் பஹத் பாசில் - நடிகை நஸ்ரியா இருவரும் கூட்டாக ரூ.25 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா பிரபலங்கள்
தமிழ் திரையுலகில் முதல் ஆளாக வயநாடு மக்களுக்கு உதவியது நடிகர் சியான் விக்ரம் தான். அவர் ரூ.20 லட்சம் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் வழங்கினர். பின்னர் நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன் ஆகியோர் தலா ரூ.20 லட்சமும், நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரூ.25 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கி இருந்தனர். குஷ்பு, மணிரத்னம், சுஹாசினி, மீனா உள்பட 10க்கும் மேற்பட்ட பிரபலங்கள் சேர்ந்து ரூ.1 கோடி வழங்கினர்.
தெலுங்கு பிரபலங்கள் வழங்கியது எவ்வளவு?
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வழங்கி இருந்தார். அடுத்ததாக நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய மகன் உடன் இணைந்து ரூ.1 கோடி வழங்கினார். புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சமும், நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கி இருந்தனர்.
இதையும் படியுங்கள்... வயநாடு நிலச்சரிவு.. மீனா, குஷ்பூ உள்ளிட்ட 80'ஸ் நடிகைகள் முதல்வரை சந்தித்து நிவாரண நிதி வழங்கினர்!