
கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் அரசியல் பக்கம் சென்ற நிலையில், இளைய மகனான சண்முக பாண்டியன் திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே ‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கைவசம் ‘மித்ரன்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். ‘படை தலைவன்’ திரைப்படத்தை ‘ரேக்ளா’, ‘வால்டர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்க, கஸ்தூரிராஜா முனீஷ்காந்த், எம்.எஸ் பாஸ்கர், யூகி சேது உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார்.
பொள்ளாச்சி அருகில் உள்ள சேத்துமடை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவரான வேலு (சண்முக பாண்டியன்), தனது தந்தை கஸ்தூரிராஜா மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் மணியன் என்கிற யானையும் வசித்து வருகிறது. மணியனை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வேலுவின் குடும்பத்தினர் பார்க்கின்றனர். இந்த நிலையில் யானையை ஒரு கும்பல் கடத்திச் செல்கிறது. யானையை கண்டுபிடிப்பதற்காக வேலுவும், அவரது நண்பர்களும் செல்கின்றனர். அந்த யானை ஏன் கடத்தப்பட்டது? அதை கண்டுபிடிக்க செல்லும் வழியில் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன? யானையை மீட்டார்களா? என்பது தான் படத்தின் கதை.
யானைக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக நிறைய தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. ‘படை தலைவன்’ படமும் அதுபோன்ற ஒரு திரைப்படம் தான். இந்தப் படத்தில் சண்முக பாண்டியன் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய உயரமும், கட்டுமஸ்தான உடலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளது. இளையராஜாவின் பின்னணி இசையுடன், எஸ்.ஆர். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி மலைகளும், ஒடிசாவின் காட்டுப் பகுதிகளும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் தேர்வும் அபாரமாக இருக்கிறது. விஜயகாந்த் தோன்றும் காட்சிகள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளுகிறது.
விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதால் இந்த படத்தை பலரும் குடும்பம் குடும்பமாக சென்று ரசித்து வருகின்றனர். மேலும் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருவதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ‘படை தலைவன்’ திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ.1.29 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படம் வெளியான இரண்டாவது இரண்டாவது நாள் (சனிக்கிழமை) ரூ.1.22 கோடி வசூலித்துள்ளது. வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை என்பதால் மூன்றாவது நாள் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
‘படை தலைவன்’ திரைப்படம் தமிழகம் எங்கும் உள்ள 500 திரையரங்குகளில் வெளியான நிலையில் இரண்டு நாள் முடிவில் ரூ.2.52 கோடியை வசூலித்துள்ளது. தியேட்டர்களின் அதிகரிப்பு, வெளிநாடுகளில் ரிலீஸ், மற்ற மாநிலங்களில் ரிலீஸ் ஆகியவற்றை செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும், விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே சுதீஷ் அறிவித்திருந்தார். இதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசூல் விவரங்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை வெளியிடும் சில இணையதளங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை மட்டுமே. அதிகாரப்பூர்வமான வசூல் விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.