
திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு கிடைக்கிறதோ, அதேபோல் netflix, prime வீடியோ, disney+ hotstar, jio சினிமா, ஆஹா, போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில், அமரன், பிரதர், மற்றும் ப்ளடி பெக்கர், என மூன்று படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நவம்பர் மாதம் ஓடிடி-யில் வெளியாக உள்ள திரைப்படங்களுக்காக ஏராளமான ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர்.
வேட்டையன்
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இருவரும் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் ஒன்றாக இணைந்து நடித்திருந்த 'வேட்டையன்' படத்தை, 'ஜெய் பீம்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார்.
தலைவரின் வழக்கமான ஆக்சன் மற்றும் மாஸான காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருந்த இந்த படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவானது. மேலும் இந்த படத்தில் பகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியே செல்வது யார்? நெட்டிசன்கள் கணிப்பு பலிக்குமா!
தங்கலான்:
கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும், உயிரைக் கொடுத்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் உருவான 'தங்கலான்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் போனது.
எனவே இந்த படம் நெட்பிலிக்ஸ் ஒடிடி தளத்தில், நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை, கே இ ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். விக்ரம் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல நடித்திருந்தனர். தங்கம் எடுக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை இந்த படத்தின் மூலம் இயக்குனர் பா.ரஞ்சித் ரசிகர்களின் கண் முன்னே நிறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்:
சீரியல் மூலம் பிரபலமாகி பின்னர், வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த நடிகர் போஸ் வெங்கட், கன்னி மாடம் படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படைப்பாக இயக்கி இருந்த திரைப்படம், 'சார்'. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில்,
நடிகர் விமல் ஹீரோவாக நடித்திருந்தார்.
'வாகை சூடவா' படத்திற்கு பின்னர், வலுவான கதைக்களத்தில் விமல் நடித்திருந்த இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக சாயாதேவி நடித்திருந்தார். மேலும் சிராஜ், சரவணன், ரமா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம், நவம்பர் 2-ஆவது வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தேவரா:
ஆர் ஆர் ஆர், திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக அறியப்பட்டு... தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஜூனியர் என்டிஆர் நடிப்பில் செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் 'தேவரா'. கொரட்டலா சிவா இயக்கியிருந்த இந்த படத்தில், ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
இளம் என்.டி.ஆருக்கு ஜோடியாக, ஜான்வி கபூர் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திறந்த இந்த திரைப்படம், நவம்பர் எட்டாம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி,கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.