
நடிகை நயன்தாரா நடித்த, சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'நானும் ரவுடி தான்'. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்திருந்தார். மேலும் நயன்தாரா காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா, மன்சூர் அலிகான், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
காமெடி கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த ரொமான்டிக் திரைப்படம், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா நடித்த போது தான்... இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார். பின்னர் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்ததோடு, 3 மாசத்துக்கு ஒரு முறை வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இப்படியே வாழ்க்கை சென்று கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் இதற்க்கு எண்டு கார்டு போடும் விதமாக 2022-ஆம் ஆண்டு நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், தங்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்தனர். இவர்களின் திருமணத்திற்கு செய்யப்பட்ட மொத்த செலவே ரூ.10 கோடிக்கும் குறைவாக தான் இருக்கும் என்றாலும்... நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை மட்டும் ரூ.25 கோடிக்கு கொடுத்ததாக கூறப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக நயன் - விக்கியின் திருமண வீடியோ வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு... நவம்பர் 18-ஆம் தேதி இந்த வீடியோ ஓடிடியில் வெளியானது.
Nayanthara: Beyond the Fairy Tale என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த டாகுமெண்டரி வீடியோவின் முழு பாதிப்பு வெளியாவதற்கு முன்பே, அதன் ட்ரைலரை நெட்பிலிக்ஸ் வெளியிட்ட நிலையில்... அதில் நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் முதல் முதலாக எடுத்த காட்சியின் வீடியோ இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியை திருமண வீடியோவில் வைக்க நயன் - விக்கி தரப்பில் இருந்து தனுஷிடம் அனுமதி கேட்ட நிலையில் அவர் தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் உரிய அனுமதி பெறாமலே இந்த வீடியோ ட்ரைலரில் இடம்பெற்றதை பார்த்த தனுஷ், அதற்காக ரூ.10 கோடி கேட்டு நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா 3 பக்கம் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய மனக்குமுறலை கொட்டி தீர்த்தார். ஒரு தரப்பினர் நயன்தாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், மற்றொரு தரப்பு 'நீங்க ஒன்றும் உங்கள் திருமண விடீயோவை ஓசியில கொடுக்கல, காசுக்கு தானே கொடுத்தீங்க. அப்போ தனுஷ் உங்க கிட்ட காசு கேக்குறதுல எந்த தப்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டு பொங்கிய நயன்தாராவுக்கே எதிராக மாறினர்.
நயன் - தனுஷ் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஏற்கனவே தனுஷை மோசமாக விமர்சனம் செய்யும் விதத்தில் அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, மீண்டும் தனுஷை சீண்டும் விதத்தில் மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வணக்கம், நமது ஆவணப்படமாக Nayanthara: Beyond the Fairy Tale வெளியாகி உள்ளது. இதில் பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரை பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றி அமையாதது. அதனால் அந்த படங்கள் குறித்த நினைவுகளும் ஆவண படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அனுகிய போது, எந்தவித தயக்கமோ தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் எனக் கூறியுள்ளார் நயன்தாரா.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தான் இணைந்து பணியாற்றிய அணைத்து தயாரிப்பாளர்களின் பெயர்களை தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டி கட்டி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் இதில் தனுஷின் பெயர் மட்டும் இல்லை. எனவே... நயந்தாரா மீண்டும் தனுஷை குத்தி காட்டுவது போல் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.