Nayanthara Dhanush Issue
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக வெளியாகும் என்று அப்போதே கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி நயன் – விக்னேஷ் சிவன் திருமணத்தின் ஆவணப்படம் வெளியாகவில்லை. ஒருவழியாக பல தடைகளை கடந்து வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஆவணப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், அதற்கு தனுஷ் தடையாக இருந்ததாகவும் நடிகை நயன்தாரா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
Nayanthara
இதுகுறித்து தனுஷுக்கு நயன்தாரா எழுதி உள்ள கடிதத்தில் அடுக்கடுக்கா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த கடிதத்தில் “ எந்த பின்புலமும் இல்லாமல், தனி ஒரு பெண்ணாக சினிமாவில் சாதிப்பது எவ்வளவு போராட்டம் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி நான் இன்று இருக்கும் நிலையை அடைந்திருக்கிறேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜாவின் ஆதரவுடன், உங்கள் அண்ணன் செல்வ ராகவனின் உதவியுடன் திரைக்கு வந்து இன்று பிரபல நடிகராக மாறி இருக்கும் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் Nayanthara : Beyond the Fairy tale’ ஆவணப்படத்தை என்னை போலவே எனது ரசிகர்களும், எனது நலன் விரும்பிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யவே அனைத்து தடைகளையும் மீறி இந்த ஆவணப்படத்தை வெளியிட தயாராகி இருக்கிறோம்.
Nayanthara
உங்களின் பழிவாங்கும் செயலில் நானும், என் கணவரும் மட்டுமின்றி, ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த ஆவணப்படத்தில் ‘ என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த நானும் ரௌடி தான் படம் இல்லாத வலி மிகவும் கொடுமையானது.
இந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும், பாடல்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற உங்களிடம் நடந்த எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்தது.
Nayanthara Dhanush Issue
2 ஆண்டுகளாக காத்திருந்து எந்த பலனும் கிடைக்காத நிலையில், மீண்டும் படப்பிடிப்பு நடத்தியே தற்போது ஆவணப்படத்தை தயாரித்துள்ளோம்.
நீங்கள் வியாபார ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்திருந்தால் அதனை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பினால் மட்டுமே நீங்கள் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சமீபத்தில் வெளியான ஆவணப்பட ட்ரெய்லரில் இடம்பெற்ற 3 விநாடி காட்சிக்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது மிகவும் வினோதமாக இருக்கிறது. அதுவும் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டு, ஏற்கனவே இணையத்தில் வெளியான காட்சிக்கு ரூ.10 கோடி கேட்பது அதிர்ச்சி அளிக்கிறது.
Nayanthara Dhanush Issue
மேடையில், உங்கள் அப்பாவி ரசிகர்களிடம் பேசுவது போல் ஒரு நிமிடம் கூட உங்களால் நடந்து கொள்ள முடியாது என்பது எனக்கும் எனது கணவருக்கும் நன்றாகவே தெரியும். ஒரு தயாரிப்பாளர், அவரின் படங்களில் பணியாற்றும் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் தயாரிப்பாளர் தானே தவிர, அரசன் அல்ல. சட்டப்பூர்வமான உங்கள் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாகவே எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.