தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் சினிமாவை போல் அரசியலில் கொடிகட்டிப் பறந்தார். குறிப்பாக மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கும் நெப்போலியன், திடீரென சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதற்கு முக்கிய காரணம் அவரின் மகன் தனுஷ் தான். அவருக்கு தசை அளர்ச்சி என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த அதிரடி முடிவை எடுத்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
அமெரிக்காவில் தனியாக ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கிய நெப்போலியன், தற்போது அந்த பிசினஸை கவனித்து வருகிறார். கோடி கோடியாய் சம்பாதிக்கும் நெப்போலியன், தன்னுடைய மகன் தனுஷுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்தார். ஜப்பானில் வைத்து தான் தனுஷிற்கு திருமணம் நடைபெற்றது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்பவரை மணந்துகொண்டார். இந்த ஜோடியின் திருமணம் ஜப்பானில் ஜாம் ஜாம்னு நடைபெற்றது. அதில் ஏராளமான சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.
தல தீபாவளி கொண்டாடிய தனுஷ் - அக்ஷயா
மகனுக்கு ஜப்பானில் திருமணத்தை நடத்திவிட்டதோடு நிற்காமல், அமெரிக்காவிற்கு வந்ததும், அங்கும் ஒரு பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதையடுத்து தன் வீட்டிற்கு முதன்முறையாக வருகை தந்த தன்னுடைய மருமகள் அக்ஷயாவை தடபுடலாக வரவேற்று அதுகுறித்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் நெப்போலியன். இந்த நிலையில் தற்போது தன் மகனின் தல தீபாவளி கொண்டாட்ட வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார்.
தன்னுடைய மகன்கள், மருமகள் மற்றும் மனைவியோடு சேர்ந்து அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வீட்டின் வாசலில் பட்டாசு வெடித்து மகிழ்ந்த நெப்போலியன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார். நெப்போலியன் மகன் தனுஷ் வீல் சேரில் இருந்தபடியே பட்டாசு வெடித்து மகிழ்ந்துள்ளார். தனுஷின் மனைவி அக்ஷயா, பட்டுப் புடவையில் பக்கா தமிழ் பெண்ணாக தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.