Breaking : நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு... சரித்திரம் படைத்தது ஆர்.ஆர்.ஆர்

First Published | Mar 13, 2023, 8:29 AM IST

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது. அப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அப்பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர். 

இதன்மூலம் இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது பெறும் முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். இப்பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தை ராஜமவுலி இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோர் நாயகர்களாக நடித்து இருந்தனர்.

இதையும் படியுங்கள்... இந்திய குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது

Tap to resize

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வெல்லும் முதல் இந்திய திரைப்படம் என்கிற பெருமையை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்னதாக சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிபெண்ட் விஸ்பரெர்ஸ் என்கிற குறும்படம் வென்று இருந்தது. 

முதன்முறையாக சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னதாக ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனக் கலைஞர்கள் நடனமாடி அசத்தி இருந்தனர். இதற்கு அரங்கமே எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அகதிகள் முகாம் டூ ஆஸ்கர்... ‘அம்மா நான் ஆஸ்கர் ஜெயிச்சிட்டேன்’னு சொல்லி அரங்கை அதிரவைத்த கே ஹூய் குவான்

Latest Videos

click me!