கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் சரிவை சந்தித்திருந்த தமிழ் சினிமா, தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. வார வாரம் படங்கள் ரிலீசாகிக் கொண்டு தான் இருக்கின்றன. பலவிதமான கதையம்சம் கொண்ட படங்கள் வருகின்றன. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான படங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஒருவேளை படம் மிகவும் பிடித்தால் திரும்ப திரும்ப பார்த்து கொண்டாடுகிறார்கள். அந்த அளவுக்கு சினிமா மீதான மோகம் அதிகரித்துள்ளது.
ரசிகர்கள் இந்த அளவுக்கு சினிமாவை கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசு ஒரு சில படங்களை பார்க்கக்கூடாதுனு சொல்லி தடை போட்டிருக்கு. அவை என்னென்ன படங்கள்? அந்த படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரே ஒரு கிராமத்திலே
இந்த படம் 1987-ல் எடுக்கப்பட்டது. இப்படத்தில் லட்சுமி, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் சாதியைப் பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும் அதிகமாக பேசப்பட்டதனால், இப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழக அரசு தடை செய்தது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்ற படக்குழு, படத்தை வெளியிட அனுமதி வாங்கியது.
தி டாவின்சி கோட்
தமிழ்நாட்டில் எப்போதுமே ஆங்கில படங்களுக்கும் அதிக மவுசு இருக்கும். அந்த வகையில் கடந்த 2006-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த தி டாவின்சி கோட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாதுனு சொல்லி தடை செய்யப்பட்டது. ஒரு சில மதங்களை புண்படுத்தும் வகையில் இருந்ததால் இப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.
டேம் 999
2011-ல் வெளிவர இருந்த படம் டேம் 999. இந்த படத்தை ஷோபன் ராய் என்பவர் இயக்கி இருந்தார். தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணையை பற்றி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வெளியானால் தமிழ் மக்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால், இப்படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாதுனு சொல்லி தமிழக அரசு தடை விதித்தது.
இதையும் படியுங்கள்... நான் மட்டும் நடிக்க வரலேன்னா... அந்த தொழில்ல இறங்கிருப்பேன் - நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்
விஸ்வரூபம்
கமல் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீசாக இருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முதலில் தடை விதித்து இருந்தது தமிழக அரசு. இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்தை வெளியிட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. பின்னர் சென்சாரில் ஒரு சில சீன்களை கட் பண்ணிய பிறகு தான் இப்படம் ரிலீஸ் ஆனது.
மெட்ராஸ் காஃபே
இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்த படம் மெட்ராஸ் காஃபே. 2013-ல் இந்தியாவில் ரிலீசான இப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த தமிழ் ஈழ விடுதலைப் போரைப்பற்றிய படமாகும். இதில் விடுதலைப்புலிகளை தவறாக சித்தரித்ததன் காரணமாக தமிழ் நாட்டில் போராட்டம் வெடித்தது. இதனால் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தமிழக அரசு தடை விதித்தது.