
சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தொலைக்காட்சிகளிலிருந்து வந்தவர்கள். நல்ல கதை, கதாபாத்திரங்கள் அமைவதோடு, அவர்களுக்கான சரியான நேரமும் வந்தால் உச்சத்தை தொடுவார்கள் என்பதற்கு உதாரணமே நடிகர் சிவகார்த்திகேயன். அதற்கு முன்னதாக சந்தனம், ரோபோ சங்கர் என்று பல நட்சத்திரங்கள் தொலைக்காட்சிகளில் இருந்து சினிமாவில் கால் பதித்தவர்கள்.
அந்த வரிசையில் தற்போது மற்றொரு பிரபலமும் சினிமாவில் காலுன்றி வருகிறார். அவர் வேறுமில்லை குக் வித் கோமாளி சீசன் 4 மற்றும் டாப் குக் டூப் குக் (டாப் குக்கு டூப் குக்கு) சமையல் நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மோனிஷா தான். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் அவரது கதாபாத்திரத்தை பெரிதாக எடுத்துக் காட்டவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ரூ.2 லட்சம் வரையில் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் எப்படி வந்தார் என்பது குறித்து பார்க்கலாம்… தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு நிலவி வருகிறது. எந்த சேனலை எடுத்தாலும் சமையல் நிகழ்ச்சி தான்.
அதற்கு முக்கிய காரணமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோ தான். ஒரு சமையல் நிகழ்ச்சியை எப்படி காமெடியாகவும், எதார்த்தமாகவும் கொடுக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நட்சத்திரங்களை தேர்வு செய்து மக்களுக்கு ஒரு காமெடி கலவையாக கொடுத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சீசனை தொடங்கிய குக் வித் கோமாளி தற்போது 5 சீசன்கள் வரையில் வந்து நிற்கிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கதாபாத்திரங்கள் சினிமாவில் தோன்றி வருகின்றனர். அவர்களில் ராமர், புகழ், தங்கதுரை, பாலா, அம்மு அபிராமி என்று சொல்லிக் கொண்டே போகலாம். சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக களம் கண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோரது காம்போ பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், கோமாளிகளை வைத்து இந்த நிகழ்ச்சி எப்படியோ 5ஆவது சீசனை முடித்துவிட்டது.
ஆனால், சன் தொலைக்காட்சியில் முதல் சீசனை பிரம்மாண்டமாக தொடங்கிய டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியானது பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது. இதற்கு ஒரே ஒரு காரணம் செஃப் வெங்கடேஷ் பட். அதன் பிறகு டூப் குக். எல்லோரும் சினிமாவில் கால் பதிக்கும் போது ஏன் வெங்கடேஷ் பட் மட்டும் சினிமாவிற்கு வரவில்லை என்பது தெரியவில்லை என்றாலும் அவர் மூலமாக இந்நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது.
மேலும், இந்த நிகழ்ச்சி ஒரு டூப் குக்காக இணைந்தவர் தான் மோனிஷா. அவரது திறமை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்திற்கு தெரியவர அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். சார்லி சாப்ளின் கேரக்டராக இருந்தாலும் சரி, தெய்வ திருமகள் விகரம் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ரசிகர்களை வியக்க வைப்பதோடு சிந்தக்க வைப்பதிலும் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மோனிஷா கூறியிருப்பதாவது: தளபதி 69 படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டதாகவும், நன்றியுடையதாகவும் உணர்கிறேன். விஜய் சாரின் பெரிய ரசிகை. அவருடைய படத்தில் நடிப்பது கனவு. அது இப்போது நனவாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற தளபதி 69 பட பூஜையில் மோனிஷாவும் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தளபதி 69 படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நரைன், பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தளபதி 69 படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி தளபதி 69 படம் உருவாக்கப்படுகிறது. தற்போது கேரளாவின் பையனூரில் விஜய் மற்றும் பூஜா தொடர்பான பாடல் காட்சிகள் படமாக்கப்படுவதன் மூலமாக முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.