அன்று தொடங்கிய வாலியின் பயணம், பல ஆண்டு காலம் தமிழ் சினிமாவை செழிப்போடு வளர வைத்தது என்றே கூறலாம். அவருடைய மரணத்திற்கு முன்னால் அவர் கொடுத்த ஒரு பேட்டியில், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் குறித்து ஒரு விஷயத்தை பேசி இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "தீனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள், அதில் மூன்று பாடல்களுக்கு வரிகள் எழுதியது வாலிபக் கவிஞர் வாளி தான்.
அப்போது தன்னுடைய முதல் பாடலை வாலியிடம் வாங்க, அவரைக் காண வீட்டுக்கு சென்றிருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். அவர் சென்றதுமே "வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுர வரையில" என்கின்ற வரிகளை முருகதாஸிடம், வாலி கூற, திகைத்துப் போய் வாலியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாராம் ஏ.ஆர் முருகதாஸ்.
உடனே கடுப்பான வாலி, இதற்குத்தான் புதிய இயக்குனர்களுக்கு நான் பாட்டு எழுதுவதில்லை. வரிகள் பிடித்திருந்தால் பிடித்து இருக்கிறது என்று சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் மாற்றுகிறேன் என்று கூற, அய்யய்யோ இல்லை சார்.. என்னுடைய படத்தில் அஜித் எப்பொழுதுமே வாயில் ஒரு வத்திக்குச்சியை வைத்துக்கொண்டு வருவது போலத்தான் காட்சிகளை அமைத்திருக்கிறேன். நீங்களும் அதையே பாட்டிலும் வைத்து எழுதி இருக்கிறீர்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறி உடனே அந்த பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களை வைத்து பட வைத்திருக்கிறார்.