
மலையாள திரையுலகம் கடந்த ஆண்டு அசுர வளர்ச்சி அடைந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அங்கு வெளியான ஆவேஷம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்கள் கேரளா மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் சக்கைபோடு போட்டன. குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்து வேறலெவல் ஹிட் அடித்தது. 2024-ம் ஆண்டு மலையாளத்தில் மொத்தம் 6 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
மஞ்சும்மல் பாய்ஸ்
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.239.6 கோடி வசூலித்தது. மலையாள திரையுலக வரலாற்றிலேயே 200 கோடி வசூல் அள்ளிய முதல் படம் இதுவாகும்.
ஆடு ஜீவிதம்
பிளெஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்த படம் ஆடுஜீவிதம். இதில் பிருத்விராஜுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இதுவும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.156.8 கோடி வசூலித்தது.
ஆவேஷம்
ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிப்பு ராட்சசன் பகத் பாசில் நாயகனாக நடித்த படம் ஆவேஷம். இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.154.1 கோடி வசூலித்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... 2025-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 6 தென்னிந்திய படங்கள்! 1000 கோடி கிளப்பில் இணையுமா?
பிரேமலு
2024-ல் ரிலீஸ் ஆகி தென்னிந்தியாவில் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் பிரேமலுவும் ஒன்று. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சக்கைப்போடு போட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 136.8 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
ஏ.ஆர்.எம்
டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த படம் ஏ.ஆர்.எம். ஃபேண்டஸி படமான இது கேரளாவில் சக்கைப்போடு போட்டதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் உலகளவில் ரூ.101.8 கோடி வசூலித்து மாஸ் காட்டியது.
மார்கோ
100 கோடி கிளப்பில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இணைந்துள்ள படம் தான் மார்கோ. உன்னி முகுந்தன், நிவின் பாலி நடிப்பில் வெளியாகி உள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படமான மார்க்கோ, மலையாளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றுவருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வசூலை ஒரே வாரத்தில் அள்ளி உள்ளது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சியை தொடர்ந்து பொங்கல் ரேஸில் இருந்து அதிரடியாக விலகிய மேலும் 3 படங்கள்!