Mani Ratnam's New Film Unveiled: What's After 'Thug Life'?
தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மணிரத்னம். ‘பகல் நிலவு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமான இவருக்கு, 1986-ம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ திரைப்படம் திருப்புமுனையை கொடுத்தது. அதன் பின்னர் கமலஹாசனை வைத்து இவர் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இன்று வரை பலராலும் ரசிக்கக் கூடிய படமாக ‘நாயகன்’ இருந்து வருகிறது.
24
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கமலுடன் கைகோர்த்த மணிரத்னம்
தொடர்ந்து ‘அஞ்சலி’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பாம்பே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘இருவர்’, ‘அலைபாயுதே’ என பல வெற்றிப் படங்களை கொடுத்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதை திரைப்படமாக இயக்கி இருந்தார். ‘நாயகன்’ படத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கமலுடன் இணைந்து இருக்கும் மணிரத்னம் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்ய லட்சுமி போன்ற பலர் நடித்துள்ளனர்.
34
புதிய படம் குறித்த அறிவிப்பு
‘தக் லைஃப்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தனது அடுத்த படம் குறித்த தகவலை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், “காதல் கதையம்சம் கொண்ட படத்தை, புதிய முகங்களை வைத்து இயக்க விரும்புகிறேன். அதற்கு இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நல்ல ஸ்கிரிப்ட், இரண்டு சரியான நடிகர்கள். இவை இரண்டும் சரியாக அமைந்தால், புதிய படத்தை இயக்குவேன்” என அவர் கூறியுள்ளார்.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி மணிரத்னத்தின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி பெயரும், கதாநாயகியாக நடிக்க நடிகைகள் ருக்மணி வசந்த் அல்லது சாய்பல்லவி பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகும் என்றும், நகரப் பின்னணியில் நடக்கும் ஒரு மென்மையான காதல் கதையை மையப்படுத்தி இந்த படம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.