இந்த கொச்சி வீடு ஒரு குடும்பத்திற்கான இடம் மட்டுமல்ல. Condé Nast Traveller India தகவல்படி, மம்மூட்டி தனது சினிமா வாழ்க்கையின் மிக முக்கியமான சில ஆண்டுகளை இங்குதான் கழித்துள்ளார். 2009-ல் 'பழேரி மாணிக்யம்: ஒரு பாதிராக்கொலபாதகத்திண்டே கதா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றபோது, அவர் இந்த வீட்டில்தான் வசித்தார்.
இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் அவரைச் சந்திக்கும் ஒரு கிரியேட்டிவ் இடமாகவும் இந்த வீடு இருந்தது. 'கேரள வர்மா பழசிராஜா', 'பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயிண்ட்' போன்ற படங்களுக்கான தயாரிப்புப் பணிகளும் இந்த காலகட்டத்தில்தான் நடந்தன.
துல்கர் சல்மானின் சினிமா பயணமும் இங்கிருந்துதான் தொடங்கியது!
இந்த வீட்டின் மிக முக்கியமான தொடர்பு, துல்கர் சல்மானின் ஆரம்பகால சினிமா வாழ்க்கைதான். மம்மூட்டியின் மகன் துல்கர் இங்குதான் வசித்தார். 2012-ல் 'செகண்ட் ஷோ' மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். 'உஸ்தாத் ஹோட்டல்', 'ஓகே கண்மணி' போன்ற படங்களிலும் இந்த வீட்டில் வசித்தபோதுதான் நடித்தார்.
இன்று, இந்த சொத்து ஒரு பொட்டிக் வில்லாவாக மாற்றப்பட்டுள்ளது. 'மம்மூட்டி சூட்' அறையில் நவீன கலைப் படைப்புகள், புகைப்படங்கள், ஒரு வாக்-இன் வார்ட்ரோப் மற்றும் தோட்டத்தைப் பார்த்தபடி ஒரு பால்கனி உள்ளது. 'துல்கர்ஸ் அபௌட்' என்ற மற்றொரு அறை, கார்கள் மீதான அவரின் ஆர்வத்தைக் காட்டும் வகையில் மினியேச்சர் கார் மாடல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மம்மூட்டியின் சேகரிப்பில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட டிவிடிக்களைக் கொண்ட ஒரு பிரைவேட் தியேட்டரும் இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு நடிகரின் வீட்டிற்கு மிகவும் பொருத்தமான அம்சம்.
மம்மூட்டியின் 75வது பிறந்தநாளில், அவரின் இந்த முன்னாள் கொச்சி வீடு, சூப்பர் ஸ்டாரை ஒரு புதிய கோணத்தில் பார்க்க உதவுகிறது: அவரின் படங்களின் பிரம்மாண்டம் வழியாக அல்ல, அவரின் குடும்ப நினைவுகள், படைப்பு மைல்கற்கள் மற்றும் அமைதியான ஆண்டுகள் வழியாக.