வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் தான் இன்று பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்படத்தின் வெற்றிக்கும் அப்பாடல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்பாடல் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனதற்கு காரணம் அதைப் பாடிய பாடகி மதுஸ்ரீயின் குரல் தான். அவரின் தனித்துவமான குரலால் தான் அப்பாடல் மக்கள் மனதில் ஈஸியாக இடம்பிடித்து விட்டது. மல்லிப்பூ பாடலை பாடிய மதுஸ்ரீ தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் மதுஸ்ரீ, இவருக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததாம். இதனால் முறையாக இசை கற்றுக்கொண்ட மதுஸ்ரீ. அதை பலருக்கு கற்றுக்கொடுத்தார். அப்படி இவரிடம் இசை பயில வந்தவர் தான் ராபி. இவரையே நாளடைவில் காதலித்து திருமணமும் செய்துகொண்டார் மதுஸ்ரீ. திருமணத்துக்கு பின்னர் கணவருடன் மும்பையில் செட்டில் ஆன மதுஸ்ரீ, சினிமாவில் பாட வாய்ப்பு தேடி வந்தார். பாலிவுட்டில் தலைதூக்கி இருந்த நெபோடிசம் காரணமாக இவருக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்துள்ளது.
அந்த சமயத்தில் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மதுஸ்ரீயின் குரலை கேட்டு, உடனே தனது இசையில் பாட வைத்தார். அலைபாயுதே படத்தின் இந்தி வெர்ஷனில் தான் மதுஸ்ரீ முதன்முறையாக பாடினார். இவரை தமிழில் அறிமுகப்படுத்தியது வித்யாசாகர் தான். அவரது இசையில் வெளியான ஆஹா எத்தனை அழகு என்கிற படத்தில் உதித் நாராயன் உடன் இணைந்து ‘நிலாவிலே நிலாவிலே’ என்கிற பாடலை பாடி இருந்தார்.
இதையும் படியுங்கள்... சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கும் ரோஜா மகள்... அதுவும் விக்ரம் மகன் துருவ்வுக்கு ஜோடியாக..!
இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் இடம்பெறும் ‘சண்டக்கோழி’ என்கிற பாடலை ரகுமான் இசையில் பாடினார் மதுஸ்ரீ. இப்பாடல் மூலம் அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பின்னர் மதுஸ்ரீக்கு தமிழில் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் இவர் சிம்புவின் காளை படத்தில் இடம்பெறும் ‘எப்போ நீ என்ன பாப்ப’, சாந்தனுவின் சக்கரகட்டி படத்துக்காக ‘மருதாணி’, ஜெய் நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெறும் ‘உன் பேரே தெரியாது’, அஜித்தின் மங்காத்தா படத்துக்காக ‘என் நண்பனே’, விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் இடம்பெறும் ‘என்னை மறந்தேன்’, வெந்து தணிந்தது காடு படத்துக்காக ‘மல்லிப்பூ’ என ஏராளமான சோலோ பாடல்களை பாடி உள்ளார்.
இவர் பாடிய சோலோ பாடல்களை கேட்டாலே ஆச்சர்யமாக இருக்கிறது என்றால், இவர் பாடிய டூயட் பாடல்கள் வேற ரகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டூயட் பாடல்களை பாடி இருக்கிறார் மதுஸ்ரீ. அதன்படி அஜித்தின் ஜி படத்தின் இடம்பெறும் ‘டிங்டாங் கோவில் மணி’, எஸ்.ஜே.சூர்யா நடித்து அன்பே ஆருயிரே படத்தில் வரும் ‘மயில் இறகே’ பாடல், ஜீவாவின் பொறி படத்தில் இடம்பெறும் ‘பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்’, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்திற்காக ‘வாஜி வாஜி’, ஜெயம் ரவியின் தீபாவளி படத்தில் இடம்பெறும் ‘கண்ணன் வரும் வேளை’, விக்ரமின் பீமா படத்துக்காக ‘ரகசிய கனவுகள்’ என இவரின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
‘மல்லிப்பூ’ பாடலைக் கேட்ட பலரும் இவர் புதுப்பாடகி என நினைத்து வரும் நிலையில், அவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார் என்கிற தகவல் பலருக்கு ஆச்சர்யமாகவே உள்ளது.
இதையும் படியுங்கள்... லாரன்ஸின் 'ருத்ரன்' பட ரிலீஸ் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!