சினிமாக்களின் வெற்றி தோல்விகள் எப்போதும் கணிக்க முடியாதவை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் கூட சில நேரங்களில் தோல்வியடையும். அதே நேரத்தில், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகும் சில படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைக்கும். இந்திய சினிமாவில் இந்த ஆண்டு பல எதிர்பாராத வெற்றிப் படங்கள் வந்துள்ளன. அவற்றில், மகா அவதார் நரசிம்மன் என்ற அனிமேஷன் படமும் ஒன்று.
24
மகா அவதார் நரசிம்மன் பாக்ஸ் ஆபிஸ்
கிளீம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்ட இந்தப் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். 2024 நவம்பரில் கோவா திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்ட இந்தப் படம், 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியானது. வெறும் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 50 நாட்களைக் கடந்தும் 240க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
34
மகா அவதார் நரசிம்மன் பட வசூல்
சாச்னிக் தகவல்படி, இந்தியாவில் மட்டும் இப்படம் 249.95 கோடி ரூபாய் நிகர வசூலையும், 297.38 கோடி ரூபாய் மொத்த வசூலையும் செய்துள்ளது. வெளிநாடுகளில் 28 கோடி ரூபாய் வசூலித்து, உலகம் முழுவதும் 325.38 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டை விட 21 மடங்கு அதிகமாகும். இதன் ஹிந்தி பதிப்பில் இருந்துதான் அதிக வசூல் கிடைத்துள்ளது. ஹிந்தியில் மட்டும் இப்படம் 187.5 கோடி ரூபாய் நிகர வசூலை பெற்றிருக்கிறது.
அதேபோல் தெலுங்கில் 49.12 கோடி ரூபாய் நிகர வசூல் செய்துள்ளது. இந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த நான்காவது படம் இது. நடிகர்கள் இல்லாத ஒரு அனிமேஷன் படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது, இந்திய சினிமாவில் இதுபோன்ற புதிய படங்கள் உருவாக்கும் வாய்ப்பை திறந்துவிட்டிருக்கிறது. இதில் மற்றுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படத்திற்கு தமிழ் சினிமாவை சேர்ந்த சாம் சி எஸ் தான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.