பகத் ஃபாசில் நடித்த 'மாரீசன்' திரைப்படம் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளியானது. நகைச்சுவை, த்ரில், மற்றும் உணர்ச்சிமிக்க காட்சிகள் நிறைந்த இந்தப் படம், கிராமியப் பின்னணியில் ஒரு டிராவல் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. வி. கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை எழுதிய இப்படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பேனரில் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார். இது அவர் தயாரிக்கும் 98-வது படமாகும். இப்படத்தில் வடிவேலுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜ் போன்றோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
24
பாராட்டை பெற்ற மாரீசன்
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். பகத் ஃபாசில், வடிவேலு ஆகியோரின் அற்புதமான நடிப்பும், அழகான கதாபாத்திர வடிவமைப்பும் நிறைந்த ஒரு சிறந்த திரைப்பட அனுபவத்தை 'மாரீசன்' வழங்குகிறது என்பதே விமர்சகர்களின் கருத்தாகும். இடைவேளை திருப்பம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று ப்ரிவியூ ஷோ பார்த்த முன்னணி வர்த்தக ஆய்வாளர்களும், விமர்சகர்களும் கூறியிருந்தனர். பகத் ஃபாசில், வடிவேலு ஆகியோரின் சிறந்த நகைச்சுவை காட்சிகளுடன், பலருக்கும் உணர்வுபூர்வமாக கனெக்ட் ஆகும் ஒரு படமாகவும் இது இருக்கிறது என்று பாராட்டு மழை பெற்றது மாரீசன் திரைப்படம்.
34
மாரீசன் பற்றி கமல் புகழாரம்
கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியையும் வழங்கும் படம் இது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம் 'மாரீசன்' என்று கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்தார். படத்தில் நகைச்சுவைக்குப் பின்னால் மனித உணர்வுகளையும் சமூகத்தின் இருண்ட பக்கங்களையும் பார்வையாளர்களுக்குக் காட்டுவதில் படம் வெற்றி பெற்றுள்ளது என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். ஒரு பார்வையாளராகவும், ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் தன்னை மிகவும் கவர்ந்த படம் இது என்று அவர் சமூக ஊடகத்தில் எழுதினார்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பஞ்சராகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் நல்ல படியாக வந்தாலும், வசூலில் அது பிரதிபலிக்கவில்லை. இப்படம் திங்கட்கிழமை அன்று வெறும் 38 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்தமாகவே நான்கு நாட்களில் இந்தியளவில் வெறும் ரூ.3.89 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது மாரீசன். இப்படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆன தலைவன் தலைவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. அப்படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களிலேயே உலகளவில் 25 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.