
ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களில் ஏவி மெய்யப்ப செட்டியாரும் ஒருவர். அவரின் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஏராளமான ஹிட் படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. சினிமாவை பற்றிய நுண்ணறிவு கொண்டவராகவும் ஏவிஎம் செட்டியார் இருந்து வந்துள்ளார். அந்த காலத்தில் ஒரு படம் ஓடுமா ஓடாதா என்கிற சந்தேகம் இருந்தால், ஏவிஎம் செட்டியாரிடம் தான் திரையிட்டுக் காட்டுவார்களாம். அந்த அளவுக்கு தொழில் நுணுக்கங்களை கற்று வைத்திருந்தார் ஏவிஎம் செட்டியார்.
அந்த காலகட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் பல்வேறு புதுமையான முயற்சிகளையும் செய்யத் தவறியதில்லை. அப்படி அவர்கள் புதுமைகளுடன் தொடங்கிய படம் தான் சர்வர் சுந்தரம். இதில் இரண்டு விதமான புது முயற்சியை எடுத்திருப்பார். ஒன்று அந்த காலகட்டத்தில் நம்பர் 1 காமெடியனாக வலம் வந்த நாகேஷை கதாநாயகனாக வைத்து இப்படத்தை எடுத்தது.
இன்றைய காலகட்டத்தில் காமெடி நடிகர் சூரியை வெற்றிமாறன் கதாநாயகனாக மாற்றிக்காட்டியதை வியந்து பேசுகிறோம். அந்த ரிஸ்கை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அந்த காலத்திலேயே எடுத்திருக்கிறார். அதேபோல் சர்வர் சுந்தரம் படத்தில் அவர் மேற்கொண்ட மற்றொரு முயற்சி, ஒரு பாடல் எப்படி உருவாகிறது, சினிமா படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை திரையில் காட்டி இருந்தார். இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து சர்வர் சுந்தரம் பட பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
1960-களில் தமிழ் சினிமாவில் கண்ணதாசன் போன்ற வியத்தகு கவிஞர்கள் கோலோச்சிய காலகட்டத்தில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் வாலி. அவர் அறிமுகமாகி 5 ஆண்டுகள் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியும், ஏவிஎம் நிறுவனம் வாலிக்கு பாடல் எழுத ஒரு முறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஆர்.எம் வீரப்பன், சத்யா மூவீஸ் சார்பில் தெய்வத் தாய் என்கிற படத்தை எடுக்கும்போது அதற்கு நிதிப்பிரச்சனை ஏற்பட்ட உடன் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அந்த படத்துக்கு உதவுகிறார். அந்த சமயத்தில் தெய்வத்தாய் பட பாடல்களை அவர் கேட்டிருக்கிறார். அவருக்கு பாடல்கள் அனைத்தும் பிடித்துப்போக, யார் அந்த கவிஞர் என கேட்டபோது வாலி என சொல்லி இருக்கிறார்கள். உடனே தன்னுடைய சர்வர் சுந்தரம் படத்தில் வாலியை பணியாற்ற வைக்க முடிவு செய்கிறார் மெய்யப்ப செட்டியார்.
இதையும் படியுங்கள்... விவாகரத்து முடிவு யாருடையது? உண்மை வெளியே வரும்..! ஆர்த்தி வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
இந்த விஷயத்தை எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் சொல்கிறார் மெய்யப்ப செட்டியார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், வாலி அன்று காலை தான் எம்.எஸ்.விக்கு வேறு ஒரு படத்துக்காக பாடல் எழுதியிருக்கிறார். பின்னர் மதியம் எனக்கு ஏதாவது வேலை இருக்கா என வாலி கேட்க, அதற்கு எம்.எஸ்.வி மதியம் ஏவிஎம் படம் தான் இருக்கு, அதற்கு வேறு கவிஞர்கள் தான் எழுதுவார்கள் உனக்கு வேலை இல்லை என சொல்லி இருக்கிறார். இதனால் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார் வாலி.
வாலி வீட்டுக்கு வந்த பின்னர் தான், எம்.எஸ்.வி-யிடம் மெய்யப்ப செட்டியார், வாலிக்கு பாட்டெழுத வாய்ப்பு தர உள்ள விஷயத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த விஷயம் வாலி காதுக்கு செல்வதற்குள் அவர் வீட்டுக்கு சென்று மது அருந்திவிட்டு செம்ம போதையில் இருந்தாராம். உடனே மெய்யப்ப செட்டியார் வாலி வீட்டுக்கு ஆட்களை அனுப்பி அவரை அழைத்து வர சொல்லி இருக்கிறார். ஆனால் மெய்யப்ப செட்டியார் அனுப்பிய ஆட்கள் எல்லாம் வாலியுடன் சேர்ந்து குடித்துவிட்டு மட்டையாகிவிட்டார்களாம்.
பாடலை ஒரே நாளில் தயார் செய்து அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு போக வேண்டிய அவசரத்தில் இருக்கிறார் மெய்யப்ப செட்டியார். சென்றவர்கள் எல்லாம் திரும்ப வராததால், இறுதியாக இசையமைப்பாளர் கோவர்தனம் என்பவரை அனுப்பி வாலியை அழைத்து வர சொல்லி இருக்கிறார் மெய்யப்ப செட்டியார். கோவர்தனம் அங்கு சென்றதும் வாலியை சந்தித்து விஷயத்தை விளக்கி சொல்ல, வாலி எப்படி குடிபோதையில் பாடல் எழுதுவது என யோசிக்கிறார்.
பின்னர் வேறு வழியின்று குளித்து, ஆடை மாற்றிக் கொண்டு ஏவிஎம் செட்டியார் முன் பாடல் எழுத அமர்கிறார். அப்போது படம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி அவரிடம் விளக்கி கூறுகிறார்கள். நாகேஷை கதாநாயகனாக போட்டதால் உள்ள எதிர்மறை விமர்சனம் இருப்பதையும் சொல்கிறார்கள். கதாநாயகனும், கதாநாயகியும் ஆடக்கூடிய பாடல் காட்சி என்று சொன்னதும், ஹீரோயினின் அழகை வர்ணித்து, ‘அவளுக்கென்ன அழகிய முகம் என பாடல் வரியை எழுதி இருக்கிறார் வாலி.
அடுத்த வரியில் கதாநாயகன் நாகேஷை வர்ணிக்கும் வகையில் அவருக்கும் அழகிய முகம் இருப்பதாக எழுதி இருக்கிறார் வாலி. உடனே அதற்கு நாகேஷ் எங்க அழகாக இருக்கிறார்.. அவருக்கு முகத்தில் அம்மை தழும்புகள் இருப்பதாக அருகில் இருப்பவர்கள் சொன்னவுடம் கோபமடைந்த வாலி, அவருக்கு அழகிய முகம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, திறமை இருப்பதால் கதாநாயகனாகவே வந்துவிட்டார் என பதிலடி கொடுத்திருக்கிறார்.
சரி அழகிய முகம் என்கிற வரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இளகிய மனம் என மாற்றிக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார் வாலி. அந்த பாடல் தான் பின்னாளில் தமிழ் சினிமா ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வரும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல். அந்த பாடல் வரிகளை எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் போது இந்த அறையில் துர்நாற்றம் வருகிறது சாம்பிராணி கொளுத்தி வையுங்கள் என்று தன் பாணியிலேயே நக்கலாக சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார் வாலி.
இதையும் படியுங்கள்... ‘கோட்’டுக்கு வேட்டு வைக்க இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள் இதோ