அன்று துவங்கி இன்று வரை இந்த 24 ஆண்டு கால திரை பயணத்தில் சுமார் 500 படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் சினேகன். "தோழா தோழா", "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா", "ஆராரிராரோ", "யாத்தே யாத்தே", "சொந்தமுள்ள வாழ்கை" என்று தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் பாடல்களை எழுதியது சினேகன் தான். தோழா தோழா பாடலை எழுதியபோது தனக்கு கிடைக்காத வரவேற்பு, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாட்டிற்கு கிடைத்தது என்று நகைப்புடன் பல முறை கூறியுள்ளார் சினேகன்.
கடந்த 2018ம் ஆண்டு 21 பிப்ரவரி அன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் துவங்கியபோது, அக்கட்சியின் முதல் செயற்குழு உறுப்பினராக இணைந்தவர் சினேகன். மேலும் கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 5ம் இடம் பிடித்தார் அவர். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி பிரபல சின்னத்திரை நடிகை கன்னிகா ரவியை அவர் திருமணம் செய்துகொண்டார்.