
காதலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அது ஒருவரின் மனதில் எப்போது வரும் எப்படி வரும் என யாருக்கும் தெரியாது. ஒரு சிலருக்கு பார்த்து பழகி, பல வருடங்கள் கழித்து தங்களின் நண்பர் மற்றும் தோழி மீது காதல் வரும். அதேபோல் இன்னும் சிலர், பார்த்த ஒரு நொடியிலேயே காதலில் விழுந்த சம்பவங்களும் இருக்கின்றன. சிலர் பார்க்காமல் கூட காதலித்து திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இப்படி காதலைப் பற்றியும், காதலால் ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் அற்புதங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த இதயபூர்வமான காதலை கொண்டாடும் விதமாகவே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் பலர் தங்களுடைய இனிமையான காதல் நினைவுகளை அசைபோடுவது உண்டு. பலருக்கு காதல் காதலியை கரம்பிடிக்கும் அழகான திருமண அனுபவத்தை கொடுத்திருந்தாலும், ஒரு சிலர் ஒரு தலை காதலை மனதில் கூட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்பட்ட, ஒரு தலை காதல் திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தளபதி விஜய் நடிப்பில், 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஷாஜகான். இந்த படத்தில் கதாநாயகியாக ரிச்சா பல்லட் நடிக்க, மற்றொரு ஹீரோவாக மலையாள நடிகர் கிருஷ்ணா நடித்திருந்தார். விஜயும் அவருடைய நண்பரும் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர். விஜய் தன்னுடைய காதலியை நினைத்து நண்பருக்கு எழுதிக் கொடுக்கும் கவிதைகள் மற்றும் காதல் கடிதங்கள் கதாநாயகி மனதை கொள்ளை கொள்கிறது. ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலி தான் நண்பரின் காதலி என விஜய்க்கு தெரிய வர, தன்னுடைய காதலை தியாகம் செய்து அவர்களின் காதலை சேர்த்து வைக்கிறாரா? இல்லையா என்பதே இந்த படத்தின் கதை. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மணிசர்மா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷாம் - அருண் விஜய் நடிப்பில், இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இயற்கை. இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.
துறைமுகத்தில் வேலை செய்யும் ஷாம், குட்டி ராதிகா மீது காதல் கொள்கிறார். ஆனால் ராதிகா, பல வருடங்களுக்கு முன் தான் சந்தித்த அருண் விஜய் தன்னை திருமணம் செய்து கொள்ள வருவார் என நம்பி காத்திருக்கிறார். அருண் விஜயை தேடும் முயற்சியில் ஷியாம் இறங்க.. திடீர் என அருண் விஜய் என்ட்ரி கொடுப்பதால், ஷாமின் காதல் ஒருதலை காதலாகவே முடிகிறது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தளபதி விஜய் நடிப்பில், 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் 'பூவே உனக்காக'. நடிகர் விஜய் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது இந்த திரைப்படம் என்று கூறலாம். காரணம் இந்த படம் வெளியாகும் முன்பு வரை விஜய் காதல் மற்றும் ரொமாண்டிக் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்தார். எனவே இவரின் படங்களை பெரும்பாலும் குடும்பத்தோடு பார்க்கும் ரசிகர்கள் தவிர்த்து வந்தனர். ஆனால் பூவே உனக்காக திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்தது. இந்த படத்தில் சங்கீதா, சார்லி, நம்பியார், விஜயகுமாரி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
விஜய் தன்னுடைய வீட்டிற்கு அருகே ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் பெண் ஒருவரை காதலிக்கும் நிலையில், அந்த பெண் தன்னுடைய மாமாவின் மகனை காதலிப்பது தெரியவருகிறது. ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக இரு குடும்பமும் பிரிந்திருக்கும் நிலையில், விஜய் பிரிந்து போன இரண்டு குடும்பத்தை சேர்த்து வைப்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் விஜய் மிகவும் நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் திரைக்கு வந்து சுமார் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.
இயக்குனர் அமீர் இயக்கத்தில், திரிஷா ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் தான் மௌனம் பேசியதே. 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். காதலை பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சூர்யா மனதில் த்ரிஷா குடியேறுகிறார். பின்னர் த்ரிஷா வேறு ஒருவரை காதலிக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரியவர, த்ரிஷாவின் காதலை சேர்த்து வைக்கிறார். அதே சமயம், சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கும் லைலாவை ஏற்று கொள்கிறாரா? இல்லையா என்பதே இந்த படத்தில் உள்ள மிகப்பெரிய ட்விஸ்ட்.
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், 1997-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் 'மின்சார கனவு' இந்த படத்தில் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி ஹீரோவாக நடித்திருந்தனர்.
அரவிந்த் சாமி, தன்னுடைய உறவினர் பெண்ணான கஜோல் மீது காதல் கொள்கிறார். ஆனால் அவர் கன்னியாஸ்திரியாக நினைக்கிறார். கஜோலின் மனதை மாற்ற, உள்ளே வரும் பிரபு தேவாவுக்கு கஜோல் மீது காதல் வருகிறது. இவர்களின் காதலுக்காக அரவிந்த் சாமி காதலை =உதறித்தள்ளும் நிலையில், இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.
நடிகர் முரளி மற்றும் ஹீரா நடிப்பில், 1991 ஆம் ஆண்டு வெளியான அழகிய காதல் திரைப்படம் தான் 'இதயம்'. இயக்குனர் கதிர் என்பவர் இயக்கி இருந்த இப்படம், காதலை நேசிக்கும் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது. "நடிகர் முரளி தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழியான ஹீராவை ஒருதலையாக காதலிக்கிறார். இந்த காதலை அவரிடம் சொல்ல தைரியம் இல்லாத முரளி, பலமுறை சொல்ல முயற்சித்த போதும் அது முடியாமல் போகிறது.
பின்னர் இதய நோயால் பாதிக்கப்படும் முரளியின் காதல் குறித்து ஹீராவுக்கு பெரிய வர, முரளியை ஹீரா மருத்துவமனையில் சந்திக்கிறார். ஹீரா முரளியின் ஒருதலை காதலை ஏற்று கொள்கிறாரா? முரளி இதய நோயால் பாதிக்கப்படுவதால் என்ன நடக்கிறது என்று உணர்வு பூர்வமான கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கி இருந்தார்.