படத்தின் கதை
கமலின் வளர்ப்பு மகனான காளிதாஸ் ஜெயராம் போலீசாக இருக்கிறார். இவர் போதைக் கடத்தல் கும்பலிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கண்டுபிடிக்கிறார். இதையடுத்த முகமுடி கும்பல் ஒன்று காளிதாஸை கொன்றுவிடுகிறது. இதையடுத்து தொடர்ந்து சில போலீஸ்காரர்களை அந்த முகமுடி கும்பல் கொலை செய்கிறது. கமலும் அந்த கும்பலால் கொலை செய்யப்படுவது போல் காட்டுகின்றனர்.
அந்த முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டான பகத் பாசிலை களமிறக்குகிறது போலீஸ். இந்த தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் பகத் பாசிலுக்கு கிடைக்கிறது. வரிசையாக போலீஸ்காரர்களை கொல்லும் அந்த முகமுடி கும்பல், போலீஸ் அல்லாத கமலை ஏன் கொலை செய்கிறார்கள் என விசாரிக்கும் போது தான் பகத் பாசிலுக்கு செம்ம டுவிஸ்ட் காத்திருக்கு.
இறுதியில் அந்த முகமுடி கும்பல் யார் என்பதை பகத் பாசில் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை பல்வேறு ஆச்சர்யங்களுடன் விறுவிறுப்பாக சொல்லி உள்ள படம் தான் இந்த விக்ரம்.
கமலின் கம்பேக்
கமல்ஹாசன், படத்தில் பாசமிகு தந்தையாக நடித்திருக்கிறார். மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது சிங்கமாக கர்ஜித்து நடிப்பில் நான் தாண்டா டாப் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு சிறப்பான கம்பேக் படமாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் இளம் நடிகர்களைப் போல் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்கியுள்ளார். இதைப்பார்க்கும் போது ஆண்டவரே வேறலெவல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
பகத் பாசில் மாஸ்
சீக்ரெட் ஏனெண்டாக நடித்துள்ள பகத் பாசில், செம்ம மாஸாக நடித்து கைதட்டல்களை அள்ளுகிறார். முதல் பாதி முழுக்க இவரது ராஜ்ஜியம் தான். மறுபுறம் விஜய் சேதுபதி, போதைப் பொருள் வியாபாரியான இவர், மகேஸ்வரி, மைனா நந்தினி, சிவானி என 3 பொண்டாட்டிகளுடன் மஜாவாக வாழ்ந்து வரும் சந்தானம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி அல்டிமேட்
கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிட்டு உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சாவை கடித்த உடன் அசுர பலம் பெற்று இவர் அடிக்கும் காட்சிகள் அல்டிமேட் ரகம். போலீஸை கொன்றுவிட்டு ஆட்டோவில் இருந்து கெத்தாக இறங்கும் இவரது எண்ட்ரி சீன் பக்கா மாஸாக உள்ளது. மாஸ்டர் பவானியை மிஞ்சிவிட்டார் என்றே சொல்லலாம்.
லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் ரசிகனாக இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு.
புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் என பிறமொழி படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், விக்ரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் காலரைத் தூக்கிவிட்டு கெத்தாக சொல்லும்படியான படத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ். படத்தில் நெகடிவ் என பார்த்தால் அது முதல் பாதியில் கமல் குறைந்த அளவிலான காட்சிகளில் வருவது தான். மற்றபடி இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.
சூப்பர் சூர்யா
சூர்யா கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ஒரு கேரக்டரில் நடித்து மிரட்டி இருக்கிறார். படத்தின் இறுதியில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களுக்கு லீடு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் லோகேஷ். விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ப்ளஸ் ஆக அமைந்த டெக்னிக்கல் டீம்
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது டெக்னிக்கல் டீம் தான். அனிருத்தின் பின்னணி இசை மாஸ் காட்சிகளை மேலும் மெருகேற்றி இருக்கிறது. கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் உள்ளது. பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதாகத் தான் இருக்கிறது. தனது நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் திறம்பட காட்சிப்படுத்தி உள்ளார் கிரீஷ். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் காட்சிகள் அனல்பறக்கும்படியாக உள்ளன.
மொத்தத்தில் ‘விக்ரம்’ கோலிவுட்டே கொண்டாடக்கூடிய படமாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... Suriya look in Vikram : விக்ரம் படத்தில் வித்தியாசமான லுக்கில் சூர்யா.. ‘வெறித்தனம்’ என சிலாகிக்கும் ரசிகர்கள்