தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 96 படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகை திரிஷாவுக்கு, திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். மணிரத்னத்தின் கனவு திரைப்படமான இதில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை திரிஷாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக திரிஷா நடித்து வருகிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதுதவிர தனுஷின் 50-வது படத்திலும் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் மூலம் தனுஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார் திரிஷா. இதற்கு முன்னர் இருவரும் கொடி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.