இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி இருந்த 'விக்ரம்' திரைப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. 100 நாட்களுக்கு மேல், திரையரங்கில் ஓடிய இந்த படத்தைத் தொடர்ந்து, 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்க உள்ளதை உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்.
பல்வேறு இடங்களில் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் விஜய் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டார் என, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து, இன்னும் சில தினங்களில் 'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் அடுத்ததாக பட குழுவினர் போஸ்ட் புரோடக்ஷம் பணிகளில் முழு கவனம் செலுத்த உள்ளனர். மேலும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பாகவே லியோ படத்தின் டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமம், தமிழக ரிலீஸ் உரிமை, ஆகியவை பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க மனோஜ் பரமசிம்கா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.