தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர், குழுமத்தின் உரிமையாளர் சரவணன் அருள் கடந்த சில வருடங்களாகவே ட்ரெண்டிங்கில் உள்ள பிரபலங்களில் ஒருவர். பொதுவாக தொழிலதிபர்கள் சிலர் தங்களின் கடை விளம்பரங்களில் வந்து நாலு வார்த்தை பேசி விட்டு செல்லும் நிலையில், இவரோ கொஞ்சம் வித்தியாசமாக ஆட்டம்... பாட்டம் என பட்டையை கிளப்பினார்.
தொழிலதிபர் என்பதை தாண்டி, தயாரிப்பாளராகவும்... ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார் லெஜண்ட் சரவணன். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து, கடந்த ஆண்டு வெளியான 'தி லெஜெண்ட்' திரைப்படம், வசூல் ரீதியாக, வெற்றிபெறவில்லை என்றாலும்... விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை குவித்தது.
இந்த படத்தை தொடர்ந்து பலர், லெஜெண்ட் சரவணனை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியானது. அதே போல் சமீபத்தில், லெஜெண்ட் சரவணன் புதிய கெட்டப்பில் வெளியிட்ட புகைப்படமும் படு வைரலானது.