
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட தனுஷுக்கு, அவருடைய குடும்பத்தினரை பொறுத்தவரைக்கு ஒரே அடையாளம் தான். அது வெங்கடேஷ் பிரபு... ஆம் நடிகர் தனுஷின் ஒரிஜினல் பெயர் அது. சினிமாவுக்காக தான் தன் பெயரை தனுஷ் என மாற்றிக் கொண்டார். ஒல்லியான தேகம், அதிகம் ஈர்ப்பு ஏற்படுத்தாக மிக சாதாரண முகம், பெரிய குடும்பத்து பின்னணி எதுவுமே இல்லாத ஒரு பின்புலம் என்று அவருக்கு அமைந்தது அவ்வளவு சுமார் ரகம் தான். ஆனால் பின் நாளில் இந்த சுமார் மூஞ்சி குமார் தான் சூப்பர்ஸ்டார் வீட்டு மாப்பிள்ளையானார்.
ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும் தேசிய விருதை தட்டிச் செல்லும் அளவுக்கு தரமான நடிகராக மாறினார் தனுஷ். ஆனால் ஆரம்பத்தில் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் நடிகனாகும் எண்ணமே இல்லாத ஒருவராக இருந்து வந்தார் தனுஷ். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், அவரின் படங்களை இன்று வரை தவறாமல் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துவிடுவார். ஆரம்பத்தில் ரஜினி ரசிகனாக இருந்த தனுஷ், பின்னர் அவர் வீட்டு மாப்பிள்ளை ஆனது மட்டுமின்றி அவரை வைத்து காலா என்கிற படத்தையும் தயாரிக்கும் அளவுக்கு உச்சம் தொட்டார்.
தனுஷின் திரையுலக வாழ்க்கைக்கு ஏணியாக அமைந்தது அவரது அண்ணன் செல்வராகவன் தான். அந்த ஏணியில் ஏறி ஏரோபிளைனில் பறந்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என ஒரு ரவுண்டு வருகிறார் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு காலில் போட கூட செருப்பு இருக்காதாம். அந்த அளவு கஷ்டத்தில் இருந்த அவரை, தேசிய விருது வாங்க ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து சென்று பெருமை சேர்த்தார் தனுஷ்.
இளம் வயதில் வெங்கடேஷ் பிரபுவாக இருந்த தனுஷுக்கு ஒரே ஒரு கனவு தான் இருந்தது. அது என்னவென்றால், எப்படியாவது படித்து ஒரு செஃப் ஆகிவிட வேண்டும் என்பது தான். சமையல்காரராக வேண்டும் என்று நினைத்தவர் சமயோஜிதமாக வந்த சினிமா வாய்ப்பை பின்னர் கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதற்கான முதல் விதை துள்ளுவதோ இளமை படம் மூலம் விழுந்தது. 2002-ல் இந்த படம் ரிலீஸ் ஆன போது, இவனெல்லாம் ஹீரோவா என்று சொன்னவர்கள் ஏராளம். ஆனால் அவர்களின் கேலி கிண்டல்களை எல்லாம் தனுஷ் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து தன்னுடைய லட்சியத்தை நோக்கி நகர்ந்தார்.
இதையும் படியுங்கள்... தனுஷுக்கு நயன்தாரா சொன்ன ஜெர்மன் வார்த்தையின் அர்த்தம் இதுதானா? என்ன இப்படி சொல்லிட்டாங்க!
தன்னை வெறுக்கும் மனிதர்கள் மத்தியில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு வேலை செய்ய ஆரம்பித்த தனுஷுக்கு இரண்டாவது படமாக காதல் கொண்டேன் வந்தது. அப்படத்திற்கு பின் தனுஷின் வளர்ச்சியை பலர் காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தனர். அடுத்ததாக திருடா திருடி வந்தது. பலர் யார்ரா இந்த தனுஷ் என திரும்பி பார்க்க ஆரம்பித்தனர். அப்படத்தில் வரும் மன்மதராசா பாடல் தமிழ் மக்களை ஆட்டிப்படைத்தது. பின்னர் படிக்காதவன், பொல்லாதவன் என தொடர் ஹிட் படங்களை கொடுத்ததால் தனுஷை சிலர் சீரியஸாக கவனித்தார்கள். சிலரோ அவரை சீரியஸாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் வண்டி ஓட்ட ஆடுகளம் அமைத்தார் தனுஷ்.
அதுவரை லோக்கல் பாய் ஆக இருந்த தனுஷ், ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்று, பின்னர் ஃபக்கீர் படம் மூலம் ஹாலிவுட் நடிகராக உயர்ந்தார். வார்த்தைகளால் யாரை வேண்டுமானாலும் பில்டப் பண்ணலாம். ஆனால் உழைப்பு தான் ஒரு மனிதனை உயரத்துக்கு கொண்டு போக பில்டப் பண்ணிவிடுகிறது. அந்த கட்டுமானத்தை தரமாக கட்டிக்கொண்டதில் தனுஷின் உழைப்பு பிரம்மிப்பு நிரம்பியது.
எந்த மேடையானாலும் வேட்டியை விரும்பும் தனுஷ், வேண்டாத சர்ச்சையை பற்றி கவலைப்படுவதே இல்லை. உயரம் போகப்போக அவரை சுற்றி வந்த சர்ச்சைகள் ஏராளம். அதையெல்லாம் அமைதியாக கடந்து செல்லும் தனுஷ் மீது தற்போது நயன்தாரா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். தன் ஆவணப்படத்தில் பயன்படுத்திய 3 செகண்ட் வீடியோவுக்கு தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா கூறி இருக்கிறார்.
3 செகண்ட் வீடியோவுக்கு 10 கோடி கேட்கும் அளவுக்கு தனுஷ் பணக்கஷ்டத்தில் இருக்கிறாரா என்று கேட்டால் அதுதான் இல்லை. அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.230 கோடி இருக்குமாம். இதுதவிர சென்னை போயஸ் கார்டனில் 150 கோடிக்கு பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் தனுஷிடம் ரோல்ஸ் ராய்ஸ் உள்பட ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன. தனுஷ் வசித்து வரும் இதே போயஸ் கார்டனில் தான் நயன்தாராவும் அண்மையில் வீடு வாங்கி செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தனுஷை பகடைக்காயாக பயன்படுத்தினாரா நயன்தாரா? அசுரனின் அமைதிக்கு காரணம் என்ன?