ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், இரண்டே நாட்களில் அஜித் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்து வருகிறது. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்து வருகிறது. 2022-ல் வெளிவந்த காந்தாரா உலக பாராட்டைப் பெற்றதும், அதன் ப்ரீக்வெல் முயற்சியில் இறங்கிய ரிஷப் ஷெட்டியின், 3 வருட கடின உழைப்பில் தயாரானது தான் காந்தாரா சாப்டர்-1. தற்போது இப்படத்திற்கு மெகா ஓப்பனிங் கிடைத்து, ரிஷப்பின் திறமையை அனைவரும் கொண்டாடுகின்றனர்.
24
100 கோடி கிளப்பில் இணைந்த காந்தாரா சாப்டர் 1
வெளியான முதல் நாளிலேயே பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம், இரண்டாவது நாளிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியாவில் படத்தின் வசூல் சுமார் ரூ.106 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் ரூ.140 கோடி வசூலித்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வளவு வேகமாக 100 கோடி கிளப்பில் இணைந்த 2வது கன்னடப் படமாக ‘காந்தாரா 1’ இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே உலகளவில் ரூ.134.5 கோடி வசூலித்தது.
34
கேஜிஎஃப் 2 சாதனை முறியடிப்பு
மறுபுறம் கர்நாடகாவில் முதல் நாளில் ரூ.32.7 கோடி வசூலித்து ‘கேஜிஎஃப் 2’ சாதனையை முறியடித்துள்ளது காந்தாரா சாப்டர் 1. கன்னடத் திரையுலகில் இந்தளவு வசூல் செய்த முதல் படமாக காந்தாரா சாப்டர் 1 உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.31 கோடியாக இருந்தது. முதல் நாளில் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம், இரண்டாவது நாளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் சுமார் ரூ.49 கோடி வசூலித்து முன்னேறி வருகிறது.
சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் என்பதால், வார இறுதி வசூல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு வரும் வரவேற்பைப் பார்த்தால், முன்பு கணித்தபடி படம் ரூ.1000 கோடி கிளப்பில் சேருவது கிட்டத்தட்ட உறுதி என நிபுணர்கள் கூறுகின்றனர். காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூலை இரண்டே நாட்களில் முறியடித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே வெறும் ரூ.137 கோடி தான் வசூலித்திருந்தது. காந்தாரா இரண்டு நாட்களிலேயே 140 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.