கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. 4 ஆண்டு இடைவெளிக்கு பின் அவரது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறி உள்ளது. இப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்டனி வர்கீஸ், சூர்யா, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதுதவிர அனிருத் இசை, கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு என பலமான டெக்னிக்கல் டீமும் இப்படத்தில் பணியாற்றி உள்ளது.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழில் தயாராகி உள்ள இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. பான் இந்தியா படமாக விக்ரம் ரிலீசாக உள்ளதால இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.